சென்னை: தமிழகத்தில் இஸ்லாமியர்களின் பெருவாரியான வாக்குகளை திமுக பெற்றுள்ளது. ஆனால், இஸ்லாமியர்கள்- தலித் வாக்குகள் திமுக பக்கமாக திரும்பிய நிலையில் பெருவாரியான சமூகத்தினரின் வாக்குகள் அதிமுக- பாஜக கூட்டணி பக்கம் போய்விட்டன. மேலும் வேலூரில் தீவிரமான திமுகவினர் தவிர மற்ற திமுகவினர் தங்கள் சமூகம் சார்ந்து வாக்களித்துள்ளதும் தெளிவாகிறது. இதனால் தான் வேலூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ஆரம்பமே ரணகளம்... அதே நேரத்தில் வேலூரில் திமுக மூத்த தலைவர் துரைமுருகன் தனது மகனுக்கு சீட் கேட்க, அதை விட்டுத் தர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மறுக்க, ஆரம்பமே ரணகளமானது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மான கார் மீது திமுகவினரே தாக்குதல் நடத்திய சம்பவம் கூட நடந்தது.
திமுகவினரே வாக்களிக்கவில்லை.. இதையடுத்து இரு தரப்பினரும் பேசி கூட்டாக பிரச்சாரத்தில் இறங்கினாலும், திமுகவினர் முழு அளவில் களத்தில் இறங்கவில்லை என்றே இந்திய தேசிய முஸ்லீம் லீக் தரப்பு கருதுகிறது. இந்தத் தொகுதியில் மிகத் தீவிரமான திமுகவினர் மட்டுமே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். மற்ற திமுகவினர் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த அதிமுகவின் செங்கூட்டுவன் மற்றும் பாஜக சார்பில் நின்ற புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களித்துவிட்டது தெளிவாகிறது.
3வது இடத்துக்கு... இதனால் தான் அப்துல் ரஹ்மான் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். காரணம், இந்தத் தொகுதியின் சுமார் 1.6 லட்சம் முஸ்லீம் வாக்குகள் தவிர ரஹ்மானுக்கு கூடுதலாக வெறும் 40,000 வாக்குகளே கிடைத்துள்ளன. இதனால் திமுக வாக்குகள் கூட அவருக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது. திமுகவினரின் உள்குத்து வேலைகள் குறித்து புலம்பும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர், விரைவில் திமுக தலைவர் கருணாநிதியையும் ஸ்டாலினையும் சந்தித்து முறையிடலாம் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment