ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானா பகுதியை பிரித்து நாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா உருவாக்கப்படுகிறது. ஜூன் 2ம் தேதி முதல் தெலங்கானா மாநிலம் செயல்பட தொடங்கும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினத்தில் இருந்து எஞ்சிய ஆந்திர பகுதிகள் அடங்கிய மாநிலமாக சீமாந்திரா மாநிலமும் செயல்படும். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. மாநில பிரிவினைக்கான முக்கிய பணிகளான சொத்துக்கள் பிரிப்பு, நிதி நிலைமை, அரசு ஊழியர்கள் பிரிப்பு போன்றவை முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பணிகள் நிறைவு பெறும் நிலையை எட்டியுள்ளது. சீமாந்திராவைச் சேர்ந்த அரசு ஊழியர்களில் ஒரு பகுதியினர் ஐதராபாத்தில் தங்கி பணியாற்றவே விருப்பம் தெரிவித்துள்ளனர். “ஐதராபாத்தில் வீடு கட்டி அங்கேயே குழந்தைகள் படிக்கின்றனர். இந்த சூழ்நிலையில், பாதியில்விட்டு எப்படி வேறு இடத்திற்குச் செல்ல முடியும்? என்று சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த ஊழியர்கள் கவலையுடன் கேள்வி எழுப்புகின்றனர். சர்ச்சை: அரசு ஊழியர்கள் பிரிப்பு, அவர்களது சொந்த ஊர் அமைந்துள்ள மாநிலத்தின் அடிப்படையில் அமைய வேண்டு¢¢ம். அதை ஒரு தகுதியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெலங்கானா அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. அதாவது, சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த ஊழியர்கள் சீமாந்திரா மாநிலத்திற்கு சென்றுவிட வேண்டும்.
தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் தெலங்கானா மாநிலத்தில் பணியாற்ற முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தெலங்கானா புதிய மாநிலத்தின் முதலாவது முதல்வராக பதவியேற்க உள்ள கே.சந்திரசேகர் ராவ், தெலங்கானா அரசு தலைமை செயலகத்தில் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்தவர்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று எச்சரித்துள்ளார். சந்திரசேகர் ராவின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. அரசு வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் உள்பட பல்வேறு விஷயங்களில் அநீதி இழைக்கப்பட்டதால்தான் தெலங்கானா பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்துவிட்டது. இதனால்தான் தனி மாநில கோரிக்கை எழுந்து நீண்டகால போராட்டத்திற்கு பிறகு புதிய மாநிலமாக தெலங்கானா உருவாகிறது. இந்த நிலையில், சீமாந்திரா பகுதியைச் சேர்¢ந்த அரசு ஊழியர்கள், தெலங்கானா அரசில் தொடர்ந்து இருந்தால், தனி மாநிலம் உருவாக்கியதில் தெலங்கானா மக்களுக்கு என்ன பயன் ஏற்படும்? என்று தெலங்கானா ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி (டிஆர்எஸ்) கட்சி தனது அலுவலகத்தில் அவசர ஆலோசனை பிரிவை (வார் ரூம்) ஏற்படுத்தி, தெலங்கானாவில் பணியாற்றும் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் பெயர் பட்டியலை தயாரித்து வைத்துள்ளது. இப்பிரிவில் பணியாற்றுபவர்களுக்காக தனியாக இணையதள வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும், சீமாந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளவருமான என்.சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாநில பிரிவினையால் ஏற்கனவே வேதனை அடைந்துள்ள மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் செயலாகும் இது. இப்போதைக்கு தேவை அவசர ஆலோசனை பிரிவு அல்ல, அமைதி பிரிவுதான் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, சீமாந்திராவுக்கு தலைநகரை தேர்வு செய்யும் முயற்சியும் தீவிரமாக நடந்து வருகிறது. விஜயவாடா & குண்டூர் பிராந்தியத்திற்கு இடையே புதிய தலைநகரம் அமையும் என்றும் அப்போதுதான் தலைநகரம் சீமாந்திராவின் மையப் பகுதியில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
விஜயவாடா & குண்டூர் தவிர, வடக்கு கடலோர ஆந்திரா பகுதியான விசாகப்பட்டினம், கர்னூல் மற்றும் ராயலசீமா பகுதியில் உள்ள திருப்பதியில் தலைநகரை அமைக்கலாம் என்ற கோரிக்கையையும் ஒரு பிரிவினர் எழுப்பியுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக ஐதரபாத் நகரை உருவாக்குவதற்கு முன்பு, கர்னூல்தான் ஆந்திரா மாநிலத்தின் தலைநகராக இருந்தது. இருப்பினும், புதிய தலைநகரை தேர்வு செய்வதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சீமாந்திராவின் பல்வேறு இடங்களை பார்வையிட்டு சாதக பாதகமான அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தி வருகிறது. விஜயவாடா & குண்டூர் இடையே உள்ள பகுதியில் ஆந்திராவின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும், அங்கிருந்தே அவர் முதல்வராக செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தகவல் அரசு தரப்பில் உறுதி செய்யப்படவில்லை. எது எப்படியோ, நாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா முறைப்படி செயல்படுவதற்காக கவுன்ட் டவுன் துவங்கிவிட்டது. இதற்கிடையே, ஒருங்கிணைந்த ஆந்திராவின் கவர்னராக இருக்கும் இ.எஸ்.எல்.நரசிம்மனிடம், புதிதாக உருவாக உள்ள தெலங்கானா மாநிலத்தின் பொறுப்பும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்டது.
தெலங்கானாவில் மட்டும் ஜனாதிபதி ஆட்சி ரத்து
ஒருங்கிணைந்த ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. ஜூன் 2ம் தேதி நாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா மாநிலம் உதயமாகிறது. இதையொட்டி, அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி (டிஆர்எஸ்) கட்சித் தலைவர் கே.சந்திரசேகர ராவ் பதவியேற்க உள்ளார். இதற்கு வசதியாக, ஜூன் 2ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் மட்டும் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்படுகிறது. ஆனால், ஜூன் 8ம் தேதி காலை 11.45 மணி அளவில் சீமாந்திராவின் புதிய முதல்வராக தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு பதவியேற்கிறார். அதுவரையில் சீமாந்திரா பகுதியில் மட்டும் ஜானாதிபதி ஆட்சி அமலில் இருக்கும். தெலங்கானா மாநிலம் அமைக்கும் பணியில் மத்திய உள்துறை அமைச்சகமும் ஆந்திர மாநில அரசும் முழுவீச்சில் இறங்கியுள்ளது. தெலங்கானாவில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யும் அறிவிப்பு ஜூன் 2ம் தேதி காலையில் வெளியாகும் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment