திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கில் போட வேண்டும் என்ற தனது கருத்தை மராட்டிய பெண்கள் கமிஷனில் ஆஜராகி அபு ஆஸ்மி உறுதிப்பட தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய கருத்து
பெண்கள் திருமண பந்தத்துக்கு வெளியே வேறு ஒரு ஆணுடன் உறவு வைத்தால், அந்த பெண்ணை தூக்கில் போட வேண்டும் என்று மராட்டிய மாநில சமாஜ்வாடி கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அபு ஆஸ்மி சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டார். அவரது இந்த கருத்து பெரும் புயலை கிளப்பியது.
பெண்களின் மனதை புண்படுத்தும்படி பேசியதற்காக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவருக்கு மராட்டிய பெண்கள் கமிஷன் சம்மன் அனுப்பியது. அதன்படி அபு ஆஸ்மி நேற்று பெண்கள் கமிஷனில் அதன் தலைவர் சுஷிபென் ஷா முன்னிலையில் ஆஜரானார். அப்போது எழுத்துப்பூர்வமாக அவர் விளக்கம் அளித்தார். அதில் திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று தனது கருத்தை உறுதிப்பட தெரிவித்தார்.
பேட்டி
பின்னர் வெளியே வந்த அபு ஆஸ்மி நிருபர்களிடம் கூறியதாவது:–
எங்களது மதம் (இஸ்லாம்) திருமண பந்தத்துக்கு வெளியே பெண்களை செக்ஸ் உறவு வைக்க அனுமதிக்காது. ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தை மீறியோ அல்லது பரஸ்பர சம்மத்துடன் உறவு வைத்தாலும் அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெண்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். தாமாக முன்வந்து ஆணுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் அவர்கள், பின்னர் ஆண்கள் மீது புகார் கொடுக்கிறார்கள். இதனால் பேரழிவு விளைவுகள் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண்கள் ஆணையம் பதிலடி
அபு ஆஸ்மியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பெண்கள் ஆணையம் பதிலடி கொடுத்து உள்ளது. இது குறித்து பெண்கள் ஆணைய தலைவர் சுஷிபென் ஷா கூறுகையில், ‘‘இந்திய அரசியலமைப்பு சட்டம், சுப்ரீம் கோர்ட்டு போன்றவை குடும்ப வன்கொடுமை சட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. முஸ்லிம் பெண்கள் உள்பட அனைத்து மத பெண்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது. நமது நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தும் சாதி, மதம், இனம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அனைத்து பெண்களுக்கும் சமமானது’’ என்றார்.
மேலும், சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருக்கும் தலைவர்கள் இதுபோன்ற பிற்போக்கு கருத்துக்களை வெளியிடக்கூடாது என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment