மும்பையை சேர்ந்த செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி முதல்வரான டாக்டர் மாஸ்கரன்ஹஸ் தங்களது மாணவர்களுக்கு அனுப்பிய ஈ-மெயிலில் மோடிக்கு வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். அவர் அனுப்பிய மெயிலில் கூறப்பட்டுள்ளதாவது; குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக என்ன நடந்துள்ளது என்பது குறித்து மனித அபிவிருத்தி தொடர்பான அட்டவணை நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் கல்வித்துறை அங்கு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உயர்கல்வி ஒரு கட்டத்திற்கு மேல் வளரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி என்பது எது? வியாபாரம் பெரிய அளவில் நடைபெறுவதா? அதிக லாபங்களை ஈட்டுவதா? உற்பத்தியில் சாதனை படைப்பதா? இதையா மக்கள் வளர்ச்சியாக கருதுகிறார்கள் என்றால் இல்லை என்பதே சரியான பதிலாக இருக்கும்.
மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதுடன், அத்தியாவசிய பொருட்களின் தேவைகள் சரியாகவும், நியாயமான விலையில் கிடைப்பதே உண்மையான வளர்ச்சியாக இருக்கும். ஆனால் இதிலெல்லாம் அம்மாநிலம் கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வித சாதனையையும் நிகழ்த்தவில்லை. எனவே எதிர்காலத்தை தீர்மாணிக்கும் வகையில் மாணவர்கள் கவனமுடன் மோடிக்கு வாக்களிக்காமல் தவிர்க்கவேண்டும் என்று அந்த ஈ-மெயிலில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு ஈ-மெயில் அனுப்பப்பட்டதற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தேர்தல் ஆணையத்திலும் இது குறித்து புகார் அளித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி கல்லூரி முதல்வருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment