நரேந்திரமோடி, விளம்பரத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவழிக்கிறார், அவர் ஆட்சியை பிடித்தால், ரூ.5 லட்சம் கோடி சம்பாதிப்பார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
மனு தாக்கல்
‘ஆம் ஆத்மி’ கட்சி நிறுவனரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியை எதிர்த்து போட்டியிடுகிறார்.
அத்தொகுதியில் நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்காக வாகன ஊர்வலமாக அவர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார். சாலையின் இருபுறமும் ஏராளமானோர் கூடி நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 2 கி.மீ. தூரத்தை அடைய 2 மணி நேரம் ஆனது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது வாகன ஊர்வல பிரசாரத்தின்போது பேசியதாவது:-
நான் ஆண்டி
பாராளுமன்ற தேர்தல் விளம்பரத்துக்காக, நரேந்திரமோடியும், ராகுல்காந்தியும் ஏராளமான பணத்தை செலவழித்து வருகிறார்கள். மோடி, ரூ.5 ஆயிரம் கோடி செலவழிப்பதாக சிலர் கூறுகிறார்கள். ராகுல் காந்தியும் பெருமளவு பணத்தை செலவழிக்கிறார்.
டெலிவிஷன், பத்திரிகை, விளம்பர பலகை என எங்கு பார்த்தாலும் அவர்கள்தான் இருக்கிறார்கள். நரேந்திரமோடி, ஆட்சியை பிடித்தால், ரூ.5 லட்சம் கோடி சம்பாதித்து விடுவார்.
ஆனால் நான் ஒரு ஆண்டி. என்னிடம் பணம் இல்லை. நான் மக்களின் பணத்தில்தான் பிரசாரம் செய்கிறேன். உங்களுக்கு யார் வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
ஹெலிகாப்டரில் ராகுல்காந்தி
சில நாட்களுக்கு முன்பு, அமேதி தொகுதியில் எங்கள் வேட்பாளர் குமார் விஸ்வாசை ஆதரித்து பிரசாரம் செய்தேன். அப்போது, ராகுல் காந்திக்கு ஓட்டுப்போட்டால், தங்கள் தொகுதி வளர்ச்சி அடையும் என நினைத்து ஏமாந்து விட்டதாக அங்குள்ள மக்கள் கூறினர். ராகுல் காந்தி, ஹெலிகாப்டரில் பறப்பதை மட்டுமே பார்க்க முடிவதாக அவர்கள் கூறினர்.
ஆனால், வாரணாசியில் அது நடக்காது. ஒரு ஹெலிகாப்டரை சுட்டிக்காட்டி, அதில் எங்கள் தலைவர் (மோடி) பறக்கிறார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அவர் ஜெயிக்கப்போவதில்லை. எனவே, உங்களுக்கு ஹெலிகாப்டர் ஜனநாயகம் வேண்டுமா அல்லது கிராமங்களுக்கு செல்லும் நபர் வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
காரில் செல்லாதது ஏன்?
இந்த தேர்தல், ஜனநாயகத்தை காக்கும் போராட்டம். இது எனது போராட்டம் அல்ல. ஊழல் அற்ற இந்தியாவை பற்றி கனவு காணும் அனைவருக்குமான போராட்டம். நல்ல சாலைகள் மற்றும் கங்கை நதியை மாசிலிருந்து காக்கும் போராட்டம். நரேந்திரமோடி, நாளை (இன்று) வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்யப் போகிறார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு சென்று, பண்டிட் மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லப்போவதாக அவரது பயணத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஏன் காரில் செல்லக் கூடாதா? நகர சாலைகளின் தரம் அவருக்கு தெரியும். எனவே, அதை தவிர்க்கிறார். எனவே, எந்த மாதிரியான ஜனநாயகம் வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
No comments:
Post a Comment