லக்னோ: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டி கூறுபோடுவோம் என்று பேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இம்ரான் மசூத் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசமாநிலம் சகாரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத். இவர் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த ரஷீத் மசூதின் உறவினர். கடந்த வியாழன்று சகாரன்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய இம்ரான் மசூத், பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது உத்தரபிரதேசத்தை குஜராத் போல கருதுகிறார். குஜராத்தில் 4 சதவீத முஸ்லிம்கள் தான் உள்ளனர். ஆனால், உத்தரபிரதேசத்தில் 42 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். எனவே அவர் உத்தரபிரதேசத்தை மற்றொரு குஜராத்தாக மாற்ற முயன்றால் அவரை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டு விடுவோம் என்று பேசினார். இந்த திடுக்கிடும் பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய சி.டி. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான சந்தியா திவாரிக்கு கிடைத்தது. அவர் அதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, உள்ளூர் போலீசார் இம்ரான் மசூத் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே தனது பேச்சுக்கு இம்ரான் மசூத் மன்னிப்பு கேட்டிருந்தார். பிரசார சூட்டில் அப்படி பேசிவிட்டேன். நான் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தி இருக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை உத்தரபிரதேச போலீசார் இம்ரான் மசூத்தை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சகாரன்பூரில் மேற்கொள்ள இருந்த தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment