கோலாலம்பூர்: கடலில் விழுந்த விமானத்தில் பயணம் செய்த சீனர்களின் உறவினர்கள் உண்மையை தெரிந்து கொள்ள சீனாவில் இருந்து கிளம்பி இன்று மலேசியா வந்துள்ளனர். இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தில் 239 பேர் இருந்தனர். அதில் 154 பேர் சீனர்கள். இந்நிலையில் விமானம் கடலுக்குள் விழுந்ததாக கூறப்பட்டாலும் அதை உறுதி செய்யும் வகையில் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்திய பெருங்கடலில் பொருட்கள் மிதப்பதை பல நாட்டு செயற்கைக்கோள்கள் படம் எடுத்து அனுப்பின. ஆனால் அவை மலேசிய விமானத்தின் பாகங்கள் என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே விமானம் குறித்து மலேசியா பல்வேறு தகவல்களை மறைப்பதாக வேறு செய்திகள் வெளியாகின்றன. இத்தனையும் பார்த்து கொதிப்படைந்த சீன பயணிகளின் உறவினர்கள் இன்று காலை மலேசியா வந்திறங்கினர். அவர்கள் விமானம் குறித்த உண்மையான தகவல்களை கேட்பதோடு, தவறான செய்திகளை அளித்தற்காக மன்னிப்பு கேட்குமாறு மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கை கேட்டுக் கொண்டுள்ளனர். மலேசியா வந்துள்ள சீன பயணிகளின் உறவினர்கள் 29 பேர் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment