Latest News

இந்துத்துவா ஆட்சியமைக்கும் முயற்சியும்... இஸ்லாமிய வாக்கு வங்கிகளின் நிலைப்பாடும்...!

அஸ்ஸலாமு அலைக்கும், 

இத்தேர்தலில் தமிழக முஸ்லிம்களின் வாக்கு யாருக்கு என்பது குறித்த என்னுடைய பார்வையை முஸ்லிமல்லா சகோதரர் ஒருவருடைய தளத்தில் பதிய வேண்டிய சூழல். அக்கருத்து உங்கள் பார்வைக்கு..

===
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

அதிமுக-வின் தேர்தல் போக்கு பாஜக-வின் பி-டீம் போல இருக்கின்றது என்பதில் பல முஸ்லிம்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இட ஒதுக்கீடும் தராதபட்சத்தில் முஸ்லிம்களின் வாக்குகளை அதிகப்படியான அளவில் அக்கட்சி இழக்க போகின்றது என்பது எளிதாக புரிகின்ற உண்மை. 

அதே நேரம், முஸ்லிம்களின் வாக்குகள் எதிர்க்கட்சியான திமுக-விற்கு முழுமையாக போகுமா என்பதில் குழப்பமான சூழ்நிலையிலேயே சமுதாயம் உள்ளது. இதற்கு முழு முதற்காரணம் கலைஞரே. மோடி குறித்தான அவருடைய கரிசன பார்வை, பாஜக நோக்கி கலைஞர் சென்றுவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக முஸ்லிம்களை எண்ண வைத்து குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும். 

திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மமக, முஸ்லிம் லீக் போன்றவற்றிற்கு முஸ்லிம்களின் அளப்பரிய ஆதரவு இருக்கும் நிலையில் திமுக நிற்கும் தொகுதிகளில் முஸ்லிம்களின் ஆதரவு நிலை அதனை நோக்கி முழுமையாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. 

ஆக அதிமுக-வை புறக்கணிக்கும் அதே வேலையில் திமுகவிற்கு அந்த வோட்டுகள் முழுமையாக மாறாது. மாறாக கம்யுனிஸ்ட்கள், காங்கிரஸ், SDPI, உதயகுமார் தலைமை தாங்குவார் என்று கருதப்படக்கூடிய எளிய மக்கள் கட்சி (ஆம் ஆத்மி) போன்றவற்றிற்கு முஸ்லிம்களின் வாக்குகள் போகக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன. 

இது தான் தற்போதைய சூழல். திமுகவை நோக்கி முஸ்லிம்கள் முழுமையாக நகர வேண்டுமானால் அது திமுக தலைமையின் நடவடிக்கைகளிலேயே உள்ளது. மதசார்பற்ற கட்சியே ஆள வேண்டுமென்றும், மோடி அலை குறித்து தனக்கே உரித்தான பாணியில் இன்று கலைஞர் விமர்சித்துள்ளதும் முஸ்லிம்களிடையே பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நான் ஏற்கனவே கூறியது போல, முஸ்லிம்களின் இந்த குழப்ப நிலைக்கு திமுக தலைமையே பொறுப்பு. இப்போது அந்த சேதாரத்தை சரி செய்வதும் அவர்கள் கையிலேயே உள்ளது. 

தேமுதிக கூட்டணி குறித்து ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை. பாஜக எங்கிருக்கின்றதோ அக்கூட்டணி முஸ்லிம்களால் முழுமையாக நிராகரிக்கப்படும். என்ன ஒரு வருத்தம், பாஜக மீதான இந்த அதிருப்தியால் வைகோ போன்றவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது தான். 

விதி தான் யாரை விட்டது??  

நன்றி சகோ,

சகோதரத்துவத்துடன்,
ஆஷிக் அஹ்மத் அ 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.