அரசு சேவைகளை பெற ஆதார் கார்டை கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை திரும்ப பெறவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கோவாவின் வாஸ்கோவில் அரசு பள்ளி ஒன்றில் சிறுமி ஒருத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இது குறித்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க, ஆதார் அடையாள அட்டைக்காக கோவாவில் பதிவு செய்யப்பட்ட கைரேகை உள்ளிட்ட தகவல்களை தங்களுக்கு அளிக்க உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது, இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 26ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘ஆதார் அடை யாள அட்டை அமைப்பு தன்னுடைய எலக்ட்ரானிக் தகவல்களை சிபிஐயுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த தகவல்களில் இருந்து, குற்ற சம்பவத்தில் திரட்டப்பட்ட கைரேகைகளுடன் ஒத்துப்போகும் கைரேகைகள் குறித்து ஆராய டெல்லியில் செயல்படும் மத்திய தடயவியல் மற்றும் அறிவியல் ஆய்வகம் நிபுணர் ஒருவரை நியமிக்க வேண்டும்’ என்று கூறியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும் ஆதார் அடையாள அட்டை வழங்கும், இந்திய ஒருங்கிணைந்த அடையாள அட்டை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது: ஆதார் அடையாள அட்டையின் கீழ் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தங்கள் விவரங்களை பதிவு செய்துள்ளனர். ஆணையத்தின் இப்போதைய விதிகளின்படி, சம்பந்தப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல், அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை எந்த அமைப்பிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, தனிநபர் உரிமையை பாதிக்கும் வகை யில் உள்ளது. ஒருவரின் அனுமதி இல்லாமலேயே அவரது தகவல்களை கட்டாயமாக மற்றவர்களுக்கு அளிப் பது தவறாகும். இவ்வாறு வழக்கில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ஜே.செல்லமேஸ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆதார் அடையாள அட்டைக்காக திரட்டப்பட்ட தகவல்களை சிபிஐயுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. எந்தவொரு அரசு துறை சேவைக்கும் ஆதார் அடையாள அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது. இது தொடர்பாக ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், அது செல்லாது. அவற்றை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment