Latest News

தன்னம்பிக்கை… விடா முயற்சி… அர்ப்பணிப்பு!




ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னஞ்சிறு கிராமம் தான் பகைவென்றி.

இக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம.மு.சிபிகுமரன். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் அப்பணிக்கு அவர் செல்லவில்லை.

ஐ.ஏ.எஸ். முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்விலும் வெற்றி பெற்று பின்னர் நேர்முகத் தேர்வு வரை சென்றிருக்கிறார் இவர். வெற்றி பெற்றாலும் வேலைக்குச் செல்லவில்லை.

பன்னிரண்டாம் வகுப்புக்கான அரசு நடத்தும் பொதுத் தேர்வாக இருந்தாலும், மத்திய,மாநில அரசுகள் நடத்தும் எந்தப் போட்டித் தேர்வுகளாக இருந்தாலும், அதற்கான ஆலோசனைகளையும், நுட்பங்களையும் இலவசமாகவே தருகிறார்:

போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி தரும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?
எனது குடும்பம் விவசாயக் குடும்பம், அரசுப் பணிக்கு எப்படி செல்வது என்ற விழிப்புணர்வு இல்லாத அக் கிராமத்திலிருந்து முதல் முதலாக அரசுப் பணி செய்யத் தேர்வானேன். ஏனெனில், வழிகாட்டுவதற்கு எனக்கு ஆட்கள் இல்லை. நானாகவே படித்து குரூப்-2 தேர்வும்,கல்லூரிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளிலும் வெற்றி பெற்றேன்.

பெற்றது வெற்றிதான் என்றாலும், என்னைப்போல வழிகாட்ட ஆள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் பல இளைஞர்கள் இருப்பதை உணர்ந்தேன். எனவே அரசுப் பணிக்குச் செல்வதைவிட இன்றைய இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாய் இருந்து விட்டுப் போவோமே என்ற எண்ணம் ஏற்பட்டது. சென்னையில் உள்ள தன்னார்வ சமூக சேவை அமைப்பான போகஸ் அகாதெமி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரானேன். அரசில் உயர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற பல நல்ல சிந்தனையாளர்களின் துணையுடன் எனது வழிகாட்டுதல்கள் சாத்தியப் பட்டிருக்கின்றன.

கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை 17 ஆயிரம் பேருக்கு இலவசமாக போட்டித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களைத் தயாரித்துக் கொடுத்து, தேர்வும் நடத்தி அதில் எவ்வாறு வெற்றி பெறுவது எனும் நுட்பத்தையும் கற்றுத் தந்திருக்கிறேன். இலவசமாகவே போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியையும் நடத்துகிறோம். பயிற்சிக்கான பாடக் குறிப்பேடுகள் அனைத்தையும் இலவசமாகவே தருகிறோம். அரசு அதிகாரிகளாக வர விரும்பும் எந்த ஓர் ஏழை இளைஞனும் எங்கள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டால் இலவசமாகவே பயிற்சிகளை வழங்கக் காத்திருக்கிறோம்.

எமது வழிகாட்டுதல்கள் மூலம் ஐ.ஏ.எஸ். தேர்வில் 21 பேர், ஐ.பி.எஸ். 16 பேர், ஐ.ஆர்.எஸ். 62 பேர் வெற்றி பெற்றிருப்பது உட்பட இதுவரை மொத்தம் 1800 பேர் அரசுத் துறைகளில் பல்வேறு பதவிகளை வகித்து வருகின்றனர்.

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விரும்புவோருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
போட்டித் தேர்வு எழுத விரும்புபவர்கள் முழு ஈடுபாட்டோடும், நம்பிக்கையோடும் படிக்க வேண்டும். தேர்வின்போது, தெரிந்த வினாக்களுக்கு முதலில் பதில் எழுதிவிட வேண்டும். எழுத்துத் தேர்வினைப் பொறுத்தவரை தங்கு தடையின்றி தொடர்ந்து 30 பக்கங்கள் வரை எழுதும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தேர்வு நாளில் பதற்றப்படாமல் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்வதோடு, தேர்வு மையத்துக்குப் போகும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளைப் பொருத்தவரை தேர்வுக்கான நேரமாக 180 நிமிடங்கள் தரப்படுகின்றன. இதனை மூன்றாகப் பிரித்து வைத்துக் கொண்டு திட்டமிட்டு எழுத வேண்டும். ஏனெனில், போட்டித் தேர்வாளர்களுக்கு நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அன்றாட நடப்பு நிகழ்வுகளையும் அதுதொடர்பான பல்வேறு செய்திகளையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், பெரும்பாலான வினாக்கள் நடப்பு நிகழ்வுகள் சார்ந்தவையாகவே இருக்கும். இரண்டாவதாக, படித்தது மறந்து போகாமல் இருக்க அவ்வப்போது சிறு, சிறு குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, குழுக்களாக அமர்ந்து படித்து சந்தேகங்களை ஒருவருக்கு ஒருவர் கேட்டுத் தெரிந்து கொள்வதும் நல்லது. இந்த மூன்றும் போட்டித் தேர்வுகளை எழுதுவோர் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.