Latest News

விண்ணப்பித்த தினமே பாஸ்போர்ட் பெறலாம்:மத்திய அரசு புதிய திட்டம்


வெளிநாடுகளைப்போல விண்ணப்பித்த நாளிலேயே பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம் நமது நாட்டிலும் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. அதற்கான ஆய்வு, பயிற்சி உள்ளிட்ட தொடர்புடைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வேலை வாய்ப்பு, கல்வி, சுற்றலா, மருத்துவம் உள்ளிட்ட இன்னும் பிற காரணங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் தினசரி வெளிநாடு செல்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. வெளிநாடு செல்வோருக்கு பாஸ்போர்ட் முக்கிய ஆவணமாகும். அதனைக்கொண்டுதான் விசா, விமான டிக்கெட்டுகள் உள்ளிட்ட பிற பயண ஆவணங்கள் பெற முடியும்.

இந்தியா முழுவதும் மொத்தம் 37 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களும், அவற்றின் கட்டுப்பாட்டில் 77 பாஸ்போர்ட் சேவை மையங்களும் பாஸ்போர்ட் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் சிலவற்றை வழங்கி வருகின்றன. தமிழகத்தில் மட்டும் சென்னை, திருச்சி, மதுரை,கோவை ஆகிய 4 இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களும், அவற்றின் கட்டுப்பாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களில் என 8 பாஸ்போர்ட் சேவை மையங்களும் (பி.எஸ்.கே) உள்ளன.
ஒவ்வொரு பாஸ்போர்ட் சேவை மையத்திலும் குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பெற முடியும். அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், மண்டல பாஸ்போர்ட் அலுவகத்தின் கண்காணிப்பில் பரிசீலிக்கப்பட்டு மண்டல பாஸ்போர்ட் அலுவலரின் ஒப்புதலின் பேரில் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், விண்ணப்பித்த ஒரு மாதத்தில் சாதாரண முறையிலும், ஒரு வாரத்தில் தட்கல் முறையிலும் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன. எனினும் சில பாஸ்போர்ட் அலுவலகங்களில் 2 மாதங்களாகியும் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் இருந்து வருகின்றன. இதற்கு, போலீஸ் விசாரணை அறிக்கை வருவதில் ஏற்படும் தாமதமே முக்கியக் காரணம் என பாஸ்போர்ட் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தாலும், அதனை காவல்துறையினர் மறுத்து வருகின்றனர்.

இந்த தாமதத்தை போக்கவே மத்திய அரடு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி விண்ணப்பித்த அன்றே, விண்ணப்பத்தை பரிசீலித்து, போலீஸ் விசாரணை அறிக்கையையும் ஆன்லைன் மூலம் முடித்து பாஸ்போர்ட் வழங்க வழிவகையுள்ளது. தற்போது இத்திட்டம் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகள் சிலவற்றில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு பாஸ்போர்ட் வேண்டி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த 3 நிமிடங்களில் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் நிர்வாகப்பணிகள் அனைத்துமே கணினி மயமாக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள அனைத்துப் போலீஸ் நிலையங்களும் ஆன் லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அதன் எண்ணை கணினியில் தட்டினாலே குறிப்பிட்ட நபருடைய விபரங்கள் அனைத்தும் தெரியும் வகையில் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் நபர்கள் குறித்த அனைத்து விபரங்களும் கணினியில் அவ்வப்போது பதிவு செய்யப்படும். அதாவது நடந்த குற்றச் செயல்கள் குறித்தும், அவற்றில் தொடர்புடையவர்கள் குறித்தும் இடம்பெற்றிருக்கும். அதனைக்கொண்டு யார் யாருக்கெல்லாம் பாஸ்போர்ட் வழங்கத் தடைவிதிக்கலாம் என உடன் முடிவெடுக்க முடியும்.

எனவே பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் பரிசீலனை, மற்றும் போலீஸ் விசாரணை ஆகியவை விண்ணப்பித்த அடுத்த சில நிமிடங்களிலேயே முடிந்துவிடும். அடுத்த கட்டமாக ஏ.டி.எம். இயந்திரம்போல பாஸ்போர்ட் பிரிண்ட் செய்வதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன இயந்திரத்தின் உதவியுடன், பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு லேமினேஷன் செய்து  வழங்கப்படுகின்றது. இந்த நடைமுறைகள் அனைத்தும் அடுத்தடுத்து சில நிமிட இடைவெளியில் முடிந்து விடுகின்றன.
எனவேதான் இத்திட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனால் அதற்கு நாடு முழுவதுமுள்ள அனைத்து காவல் நிலையங்களும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படுவது அவசியம். எனவே மாநில அரசுகளின் துணையோடு அதற்கான பணியில் இறங்கியுள்ளது மத்திய அரசு. இதற்காக என்.ஐ.எஸ்.ஜி ( நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்மார்ட் கவர்ன்மென்ட் )என்ற மத்திய அரசு நிறுவனம் முழு வீச்சில் இயங்கி வருகின்றது. இந்த அமைப்பின் முக்கியப் பணி யாதெனில் அரசுத்துறைகளையும் தனியார் துறைகளைப்போல் சிறப்பாக இயங்க வைப்பதேயாகும்.

இத்திட்டம் வெற்றி பெறுவது மாநில அரசுகளின் கைகளிலும், குறிப்பாக காவல்துறையினர் வசமும்தான் உள்ளது என்கின்றனர். காரணம் அனைத்து காவல் நிலையங்களையும் ஆன் லைனில் இணைக்க மாநில அரசுகள் உத்தரவிட்டு, அதனை காவல் துறை அதிகாரிகள்  நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளில் நாடுமுழுவதும் நடந்த குற்றச் சம்பவங்களையும், அதன் தொடர்புடையோரையும் அந்தந்த பகுதி காவல் நிலைய கணினியில் பதிவு செய்து, ஆன்லைனில் இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு சி.சி.டி.என்.எஸ் ( கிரைம் மற்றும் கிரிமினல் ட்ராக்கிங் நியூ ஒர்க் சிஸ்டம் )என பெயரியப்பட்டு அதற்காக ரூ.40 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கியும் உள்ளது.

அதனையொட்டி மாநிலங்களில் உள்ள சில காவல் நிலையங்களில் குற்ற விபரங்கள் பதிவு செய்யப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நவீன திட்டம் குறித்து ஆய்வு மற்றும் பயிற்சிகளுக்காக நாடு முழுவதிலிமிருந்து முக்கிய அலுவலர்கள் 23 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. அதில் பாஸ்போர்ட் அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள், நிர்வாகம், தகவல் தொழில் நுட்பத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள், கணினி துறை வல்லுனர்கள் இடம் பெற்றிருந்தனர். தமிழகத்திலிருந்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் க. பாலமுருகன், திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த ரூபேஸ்குமார்மீனா (தற்போது வேறு மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்)ஆகிய இருவரும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த சிறப்புக் குழுவினர் கடந்தாண்டு இறுதியிலிருந்து சிங்கப்பூர் சென்று, அங்கு 3 நிமிடத்தில் பாஷ்போர்ட் வழங்கும் முறையை ஆய்வு மேற்கொண்டு அவை குறித்து தெரிந்து கொள்ள ஒருவாரம் பயிற்சியும் பெற்று திரும்பியுள்ளனர். இந்தியாவில் பெங்களூர், புது தில்லி, மும்பை ஆகிய இடங்களுக்கும் சென்று நாடு முழுவதும் இப்புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும், செயல்படுத்தும் விதம் குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.என்.ஐ.எஸ்.ஜி அமைப்பானது மாநிலங்கள் தோறும் சென்று, காவல் துறையினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை சந்தித்து விளக்கி அதற்கான பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.
இது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் க. பாலமுருகன் கூறுகையில்,

இத்திட்டம் மிகவும் அற்புதமானது. நாளுக்கு நாள் பாஸ்போர்ட் தேவை அதிகரித்து வருகின்றது. அவசர தேவைகளுக்காக தட்கல் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வந்தாலும்  இடைத்தரகர்கள் அப்பாவிகளை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களிóன் தேவையை கருத்தில் கொண்டு அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இதன் மூலம் தகுதியுடையவர்களுக்கு விரைந்து பாஸ்போர்ட் வழங்க முடியும் என்றார்.

காவல்துறை கண்காணிப்பாளர் ரூபேஸ்குமார்மீனா கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் நிலையங்கள் பெருமளவில் இணைக்கப்பட்டுள்ளன. எனவேதான் தமிழகம் சார்பில் என்னை அழைத்திருந்தனர். விரைவில் சி.சி.டி.என்.எஸ். திட்டம் வெற்றி பெற்றால் விரைவில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.