மக்களவை தேர்தல் பிரசார பணிகளில் சிறுவர்களை பயன்படுத்தும் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 8 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் பிரசாரங்கள், பேரணிகள், வாக்குசேகரிப்பு பணிகளின்போது, சிறுவர்களை அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. துண்டு பிரசுரங்கள் விநியோகம், கோஷம் போடுவது, பட்டாசுகளை வெடிப்பது, கொடிகளை ஏந்திச் செல்வது போன்ற பணிகளுக்கு சிறுவர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சிறுவர்களை எந்த பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும், அதைப்பற்றி அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் கவலைப்படுவதே இல்லை. இப்போது மக்களவை தேர்தல் பிரசாரம் தீவிரமாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் சிறுவர்களை பிரசாரங்களில் பயன்படுத்திக் கொள்வது சர்வசாதாரணமாக நடக்கிறது. படிப்பு அல்லாத எந்த செயலிலும் சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால், அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களை பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகந்த் என்பவர், தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்தார்.
இந்த புகாரை, தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை செய்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். இது தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து 8 வாரத்துக்குள் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு தொடர்ந்த அகந்த், புவனேஸ்வரில் அளித்த பேட்டியில், ‘‘சிறுவர்களை பணத்தாசைக் காட்டி, பிரசார பணிகளில் ஈடுபடுத்துகின்றனர். அவர்களின் படிப்பு பாழாவதைப் பற்றி அரசியல் கட்சியினரோ அல்லது வேட்பாளர்களோ எந்த கவலையும் கொள்வது இல்லை. இப்படிப்பட்ட நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு பெரும் வரவேற்புக்கு உரியது’’ என்றார்.
No comments:
Post a Comment