உ.பி.மாநிலம், கான்பூரில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மோடியும், ராகுலும் முகேஷ் அம்பானியின் ஏஜண்டுகள் தான். மோடி தன்னை டீக்கடைக்காரர் என்று கூறிக் கொள்கிறார். ஒரு டீக்கடைக்காரருக்கு எப்படி ஹெலிகாப்டர்கள் வந்தன. மோடியின் ஒரு பிரசார கூட்டத்திற்கு 50 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த பணம் எங்கிருந்து வந்தது.
முகேஷ் அம்பானி மீது நான் வழக்கு பதிந்ததை குறை கூறும் காங்கிரஸ், நான் அரசியலமைப்பு சட்டத்தை மீறிவிட்டதாக கூறுகிறது. இந்நிலையில், பா.ஜ., காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டியது நம் கடமையாகிவிட்டது.
மன்மோகன்சிங்கை அகற்றிவிட்டு, மோடியை பிரதமராக கொண்டு வருவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நான் உங்களிடம் ஓட்டு கேட்க வரவில்லை, ஊழல்வாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள் என்று கேட்கவே வந்துள்ளேன்.
உத்தரபிரதேசத்தில் மோடி அலை வீசவில்லை. இங்கு வேறு அலைதான் வீசுகிறது. நாங்கள் டெல்லியில் 28 இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்கு, மக்களிடம் இருந்த, காங்கிரஸ் மீதான கோபமே காரணம். தற்போது நாடு முழுவதும் மக்களிடம் கோப அலையே வீசுகிறது. அதன் காரணமாகவே, மக்கள் தெருவில் இறங்கி போராட துவங்கிவிட்டனர்.
நாட்டில் உள்ள அனைத்து எரிவாயு வளங்களையும், முகேஷ் அம்பானிக்கு பா.ஜ., விற்று விட்டது. அதையே காங்கிரசும் பின்பற்றி வருகிறது. தேர்தல் செலவுக்கு அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் கட்சி பணம் வாங்கி உள்ளது. எரிவாயு மோசடி குறித்து மோடிக்கு கடிதம் எழுதினேன். இதுவரை பதில் இல்லை. இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
No comments:
Post a Comment