Latest News

பிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்


தமிழகம், புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் மையங்களில் 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் நாளை தொடங்கி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் 5,600 பள்ளிகளை சேர்ந்த சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுக்கான அனைத்து நடைமுறைகளும் கணினி வழியாகவே செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாணவர்களின் தேர்வு விண்ணப்பங்கள் அனைத்தும், ஆன்லைன் மூலமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆன்லைன் மூலமே, தனித் தேர்வர்களின் விண்ணப்பங் களும் பெறப்பட்டு அவர்களுக்கு ஆன்லைன் மூலமே ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.மேலும், இந்த ஆண்டு விடைத்தாளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் பக்கத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண்களையோ, பாடங்களையோ எழுத வேண்டியதில்லை. அனைத்தும் விடைத்தாளில் அச்சிட்டே வழங்கப்படுகிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள், தங்களின் கையெழுத்தை மட்டும் முதல் பக்கத்தில் பதிவு செய்தால் போதும்.

தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு நேரத்தில் கடைபிடிக்க வேண்டியவை குறித்து விடைத்தாளின் 2ம் பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்கள், எக்காரணம் கொண்டும் தேர்வு அறையில் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து வரக் கூடாது என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஷூ, பெல்ட், டை அணிந்து வர அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த ஆண்டு ஷூவை தேர்வு அறைக்கு வெளியில் கழற்றி வைத்து விட்டுதான் வர வேண்டும் என்று அறிவித்துள்ளனர். அறிவியல், கணக்கு, வணிக கணிதம், கணக்கு பதிவியல் உள்ளிட்ட தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளில் வரைபடங்களை ஸ்கெட்ச் பேனா, கலர் பென்சில் ஆகியவற்றை பயன்படுத்த இந்த ஆண்டு தேர்வுத்துறை தடை விதித்துள்ளது. விடைத்தாளில் எழுதப்படும் விடைகளின் கீழ் அடிக்கோடு இடக் கூடாது. குறிப்பாக ஸ்கெட்ச் பேனா, கலர் பென்சில் ஆகியவற்றால் அடிக்கோடு கண்டிப்பாக இடக்கூடாது. சிவப்பு மையை பயன்படுத்த கூடாது. 40 பக்கம் கொண்ட விடைத்தாளில், அந்த பக்கங்களுக்குள்ளாகவே விடைகளை எழுத வேண்டும்.

தவிர்க்க முடியாத நிலையில் தேவைப்பட்டால் கூடுதல் விடைத்தாள் (அடிஷனல் ஷீட்) தரவும் தேர்வு மைய கண்காணிப்பாளரை அறிவுறுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் நீல மை, கருப்பு மை பேனாக்களை பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி முழுவதும் தேர்வு அறை மேற்பார்வையாளராக ஒரு லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் ஆயிரம் பறக்கும் படைகளும், இதுதவிர போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர்.பொறியியல் பாடப்பிரிவுகளான இயற்பியல், வேதியியல், கணக்கு உள்ளிட்ட தேர்வு நடைபெறும் நாட்களில் அண்ணாபல்கலைக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் 500 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 வரை தேர்வு நடக்கிறது. முதல் 15 நிமிடங்கள் விடைத்தாளில் பதிவு எண்ணை எழுதவும், கேள்வித்தாளை படித்து பார்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்க வேண்டும். மாணவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.தடையில்லா மின்சாரம்: நாளை முதல் வரும் 25ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடக்கும் தேர்வு மையங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.