இன்று தமிழத்தில் வேட்புமனு தாக்கல நடந்த பகுதி மற்றும் வேட்பாளர் பெயர்கள்
சென்னை: மயிலாடுதுறை லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் ஐயர், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதேசமயம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மணிசங்கர் ஐயர்
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மணிசங்கர் அய்யர் போட்டியிடுகிறார். அவர் சனிக்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் சுதர்சன நாச்சியப்பன், மணிசங்கர் அய்யரின் மனைவி, மகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் ஆகியோர் உடன் சென்றனர். முன்னதாக மனுதாக்கல் செய்யும் இடத்திற்கு காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் மணிசங்கர் அய்யர் ஊர்வலம் வந்தார்.
கடலூரில் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர்
கடலூர் லோக்சபா தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக கு.பாலசுப்பிரமணியன் போட்டியிடுகிறார். அவர் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
டிராபிக் ராமசாமி
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு சவால் விடும் வகையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை டிராபிக் ராமசாமி இன்று சென்னை அடையாறு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். இதேபோல், லோக்சத்தா கட்சியின் மாநில அமைப்பு செயலாளரான ஜெய் கணேஷ் என்பவரும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சில்லரையுடன் வந்த சுயேச்சை
தென் சென்னை தொகுதியில் இன்று காலையில் "செய் முன்னேற்ற கழகம்" சார்பில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் குப்பல் ஜி.தேவதாஸ், அடையாறு மாநகராட்சி அலுவலகத்தி்ல் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது, டெபாசிட் தொகையில் 5 ஆயிரம் ரூபாயை சில்லரையாக கொண்டு வந்தார். அதனை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
எப்படி எண்ணுவது?
அப்போது, அருகில் இருந்த பெண் அதிகாரி ஒருவர், "என்ன சார் சில்லரையாக கொண்டு வந்துள்ளீர்களே? என நொந்துபோய் சலித்துக் கொண்டார். உடனே, வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக அங்கு வந்து இருந்த சமூக ஆர்வலரும் சுயேட்சை வேட்பாளருமான டிராபிக் ராமசாமி, "இதை செய்வதற்குத்தானே உங்களை இங்கே வேலைக்கு வைத்துள்ளார்கள் என்று கூறவே சில்லரை வாங்கி வைத்துக் கொண்டனர் அதிகாரிகள்.
வடசென்னையில் எஸ்.டி.பி.ஐ
இதேப்போன்று வடசென்னை தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் போட்டியிடும் நிஜாம் முகைதீன், இன்று காலை தங்கசாலை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ
ராமநாதபுரம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளராக பரமக்குடி வேந்தோணி கிராமத்தை சேர்ந்த நூர்ஜியாவுதீன் போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று காலை ராமநாதபுரம் தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தகுமாரிடம் நூர்ஜியாவுதீன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மதுரையில் திருநங்கை
மதுரையில், திருநங்கைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் பாரதிகண்ணம்மா என்பவர் சமீபத்தில் ‘ஆம்சாத்தி' என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் சார்பாக மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மார்க்சிஸ்ட் வேட்பாளர்
அவரைத் தொடர்ந்து, சவுராஷ்டிரா சமூக சங்கம் சார்பாக கே.ரமேஷ் என்பவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் விக்கிரமனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று முதல் நாள் என்பதால் கலெக்டர் அலுவலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment