Latest News

ரயில் கட்டண உயர்வு இல்லை


கடும் அமளிக்கு இடையே அடுத்த 4 மாதங்களுக்கான இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூனே கார்கே லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார். பயணிகள் கட்டண உயர்வு இல்லை, 72 புதிய ரயில்கள் உள்ளிட்டவை சிறப்பு அம்சங்களாக அறிவிக்கப்பட்டன.
தெலுங்கானா பகுதி எம்.பி.,க்களின் தொடர் அமளி காரணமாக சபாநாயகர் மீராக்குமாரின் வேண்டுகோளின்படி மல்லிகார்ஜூனே, தனது பட்ஜெட் உரையை சுருக்கி வாசித்தார். மொத்தம் 20 நிமிடங்களில் கார்கே தனது பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார்.

நிதி ஒதுக்கீடு அவசியம்:

லோக்சபாவில், இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து, அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு ரயில்வே துறை உறுதுணையாக உள்ளது. நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்துவதை கவனத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். அதற்கு இது தான் நேரம். கடந்த ஆண்டுகளில் 6வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ரயில்வே நிறைவேற்றி உள்ளது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு அவசியமாக உள்ளது. தற்போது நாட்டில் 4,556 கி.மீ. தொலைவிற்கு ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. பல புதிய ரயில்பாதைகள் அமைக்கப்பட்டன. புதிய ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில் வசதியை மேம்படுத்த புதிய பெட்டிகள் மாற்றப்பட்டன. இந்திய ரயில்வே வரைபடத்தில் விரைவில், அருணாசல பிரதேசத்தில் உள்ள இடநகர் இடம் பெறும். இவ்வாறு கார்கே குறிப்பிட்டார்.

பட்ஜெட் முழு விபரம் :

கடந்த 8 மாதங்களில் பல புதிய ரயில்வே திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் காஷ்மீரை இணைக்கும் ரயில்வே திட்டம் ஒரு புதிய சாதனை; ரயில்வே துறையில் 6வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டுள்ளது; இதற்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; வடகிழக்கு பகுதிகளுக்கு 510 கி.மீ., தூரத்திற்கு ரயில்வே பாதை அமைக்கப்பட உள்ளது; ரயில்வே வரைபடத்தில் மெகாலயா இணைக்கப்பட உள்ளது; ரயில்வே துறைக்காக மேலும் 3 தொழிற்சாலைகள் இயக்கப்பட்டுள்ளன; பயணிகள் கட்டணம் உயர்த்தப்பாடது; கடந்த ரயில்வே பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட 2207 கி.மீ., புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் 2000 கி.மீ., வரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது; இதற்காக 1288 டீசல் இன்ஜின்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே பட்ஜெடின் முக்கிய அம்சங்களும், அறிவிப்புக்களும் :

* பயணிகள் மற்றும் சரக்கு கட்டண உயர்வு இல்லை;

* 10 பயணிகள் ரயில், 7 மின்சார ரயில்கள் உள்ளிட்ட 72 புதிய ரயில்கள் அறிமுகம்;

* 17 அதிக கட்டணத்துடனான பிரிமியம் ரயில்களும், 38 விரைவு ரயில்களும் இயக்கப்பட உள்ளன;

* ரயில் சேவையை மேம்படுத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது; 2014 – 15ல் பயணிகள் பிரிவில் ரூ.45,300 கோடி வருவாய் கிடைக்கும்;

* மேகாலயா- அருணாச்சல பிரதேசத்திற்கு ரயில் சேவை தொடங்கப்படும்;

* ரயில்வே துறையில் 6வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டுள்ளது;

* நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 56 கி.மீ., பாதை அதிகமாக மின்மயமாக்கப்பட்டுள்ளது;

* 2,027 கி.மீ., நீளமுள்ள இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன; 2,227 கி.மீ., தூரமுள்ள இருப்புப் பாதைகள் இரட்டைப் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன;

* கடந்த ரயில்வே பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட 2207 கி.மீ., புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் 2000 கி.மீ., வரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது; இதற்காக 1288 டீசல் இன்ஜின்கள் தயார் செய்யப்பட்டுள்ளன

* ரயில்வேயை மேம்படுத்த உடனடியாக புதிய முதலீடுகள் தேவைப்படுகிறது.

* தீ விபத்தை தடுக்க ரயில் பெட்டிகளில் தீ அணைப்பு கருவி வைக்கப்படும்;

* ரயில் சமையறையில் மின்சார அடுப்பு மூலம் உணவுகள் சமைக்கப்படும்;

* முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்களை மொபைல் போன்கள் மூலம் பெற புதிய வசதி செய்யப்பட்டுள்ளது;

* குறிப்பிட்ட சில ரயில்களில் உணவுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்;

* திட்டமிட்ட திண்டினம்- நகரி இருப்புப் பாதையை புதுச்சேரி வரை நீட்டிக்க ஆய்வு நடத்தப்படுகிறது.

* சேலம்- ஓமலூர் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கப்படும்;

தமிழகத்திற்கு புதிய ரயில்கள் : தமிழகத்துக்கு 2 பிரிமியர் ரயில்கள், 3 பாசஞ்சர் ரயில்கள், 4 விரைவு ரயில்கள் உள்ளிட்ட 9 ரயில்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து அசாமின் காமாக்யாவுக்கு வாராந்திர ஏசி ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்திற்கு 4 விரைவு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவிற்கு ஈரோடு வழியாக வாராந்திர ரயில்; சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு தினசரி விரைவு ரயில் இயக்கப்படும்; மன்னார்குடியில் இருந்து ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு வாராந்திர விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது; சென்னையில் இருந்து மும்பைக்கு குல்பர்கா வழியாக வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது; நாகர்கோவிலில் இருந்து நாமக்கல் வழியாக ஆந்திராவின் கச்சிகுடாவிற்கு வாராந்திர ரயில்; மன்னார்குடி-மயிலாடுதுறை இடையே தினசரி பாசஞ்சர் ரயில்; திருச்செந்தூர்-நெல்லை இடையே தினசரி பாசஞ்சர் ரயில் சேவை, புனலூர் (கேரளா)- குமரி இடையே தினசரி பாசஞ்சர் ரயில் இயக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.