இனக்கலவரம் நடைபெறும் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கூடுதலாக சர்வதேச ராணுவத்தை உடனடியாக அனுப்புமாறு ஐ.நா பொதுச் செயலாளர் பான்கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன் தினம் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பான் கீ மூன் இக்கோரிக்கையை முன் வைத்தார்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் அமைதியை நிலைநாட்டவும், சாதாரண மக்களின் உயிரை பாதுகாக்கவும் கூடுதல் ராணுவம் தேவையாகும்.
அமைதிப் படையை அனுப்ப பல மாதங்கள் ஆகலாம். ஆனால், அவ்வளவு காலம் காத்திருக்க அந்நாட்டு மக்களால் இயலாது. தாக்குதல் பரவுவதை தடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேய உதவிகளை வழங்கவும் படையினரால் இயலும் என்று பான் கீ மூன் தெரிவித்தார்.
கூடுதலாக 3 ஆயிரம் படையினரை மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்கு அனுப்ப வேண்டும் என்பது பான் கீ மூனின் கோரிக்கையாகும். 6 ஆயிரம் ஆப்பிரிக்க யூனியன் அமைதிப் படையினரும், 2 ஆயிரம் பிரான்சு நாட்டுப் படையினரும் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரம் படையினரை அனுப்ப ஐரோப்பிய யூனியனும் தீர்மானித்துள்ளது.
உண்மை கண்டறியும் குழு
இதற்கிடையே மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்கு உண்மை கண்டறியும் குழுவை அனுப்ப முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோ-ஆபரேசன் (ஒ.ஐ.சி) முடிவுச் செய்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை சவூதி அரேபியாவில் நடந்த ஒ.ஐ.சியின் அவசரக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.
பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் விரைவில் மத்திய ஆப்பிரிக்காவிற்கு சென்று துயரங்களை அனுபவிக்கும் முஸ்லிம் சிறுபான்மை மக்களிடம் தங்களது ஒற்றுமை ஆதரவை தெரிவிப்பார்கள் என்றும் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் ஒ.ஐ.சியின் பொதுச் செயலாளர் இயாத் அமீன் மதனி தெரிவித்தார்.
ஆப்பிரிக்க நாடான கினியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் லவ்னிஸி ஃபார் ஒ.ஐ.சி குழுவிற்கு தலைமை வகிப்பார்.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய ஆப்பிரிக்கா குடியரசில் முஸ்லிம் புரட்சிப் படையினர் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து கிறிஸ்தவ ஆயுதக் குழுக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். நாட்டின் மக்கள் தொகையில் பாதிபேர் கலவரம் மூலம் புலன்பெயர்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment