ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதராக பொறுப்பேற்றுள்ள டி.பி.சீதாராம் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 15.03.2014 சனிக்கிழமை மாலை இந்திய இஸ்லாமிக் சென்டரின் சார்பில் நடைபெற்றது.
இஸ்லாமிக் சென்டரின் பொதுச் செயலாளர் அப்துர் ரஷீது வரவேற்புரை நிகழ்த்தினார். அமைப்பின் தலைவர் பாபாஹாஜி தலைமை வகித்தார். அவர் தனது தலைமைஉரையில் அபுதாபி இந்தியன்
இஸ்லாமிக் சென்டரின் பணிகளையும் இப்பணிக்கு உதவிய மறைந்த ஜனாதிபதி ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களை நினைவு கூர்ந்தார்
வரவேற்புரை நிகழ்த்திய அப்துல் ரஷீது இந்தியத் தூதரின் பணி சிறக்க வாழ்த்துவதாகவும், இந்திய மக்களுக்கான நற்சேவைகளுக்கு இஸ்லாமிக் சென்டர் எப்போதும் தயாராவிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏற்புரை நிகழ்த்திய இந்தியத் தூதர் டி.பி.சீதாராம் அவர்கள் “ இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு மிகப் பெரிய நாடு நம் நாடு. அந்த இணக்கமான வாழ்வியல் முறை நம் நாட்டிற்கு பெருமை. நாடுவிட்டு நாடு வந்துள்ள நாம் இந்நாட்டிற்கு நம்பிக்கையானவர்களாகவும் இந்நாட்டு சட்டதிட்டங்களை மதிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்“ என்றார்.
இவ்வுரையில் தன் இளமைக் கால வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். சிறுவயதில் கேரளாவில் தன்படிப்பைத் தொடங்கியதையும் அதன் பிறகு தமிழகத்தில் தன் படிப்பைத் தொடர்ந்ததையும் அதனால் தான் மலையாளியாகயிருந்தாலும் மலையாளத்தில் பேசுவதை விட தமிழில் சரளமாக பேச இயலும் என்ற கூடுதல் தகவலைத் தெரிவித்தார்.
இந்தியத்தூதராக பொறுப்பேற்றுள்ள சீதாராம், மொரிஷியஷின் ஹை கமிஷனராக இருந்து அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளார். அமீரகத்தின் இந்தியத் தூதராகவிருந்த எம்.கே. லோகேஷ் சுவிட்சர்லாந்துக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் அபுதாபியிலுள்ள கேரளா சமாஜம், கே.எம்.சி.சி, இந்திய மகளிர் அசோசியேஷன் உள்ளிட்ட இந்திய அமைப்புகளிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உஸ்மான் ஹாஜி, சிங், சஞ்சீவ், அஜீத், ஷாஜஹான், புஷ்பா, நம்ரிதா, பொறியாளர் வி.களத்தூர் நவ்சாத்அலி, அபுதாபி அய்மான் நிர்வாகிகள் லால்பேட்டை அப்துர்ரஹ்மான், ஆவை அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment