தேசியக் கட்சிகளுக்கு செல்வாக்கான தொகுதி கன்னியாகுமரி. இங்கே பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் போட்டியிடலாம் என்பதால் ஸ்டார் தொகுதி அந்தஸ்தில் இருக்கிறது.
இந்த நிலையில், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும் களமிறங்கலாம் என்று சொல்லப்படுவதால் கூடுதல் கவன ஈர்ப்பு ஆகியிருக்கிறது கன்னியாகுமரி.
முக்கிய அரசியல் கட்சிகள் மீது உச்சகட்ட வெறுப்பில் இருக்கும் உதயகுமார் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் நல்ல நட்பில் இருக்கிறார். இதைவைத்து அவரை ஆம் ஆத்மி வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றை டெல்லிக்கு அனுப்பும் முயற்சியில் சிலர் இறங்கி இருக்கிறார்கள்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அணு உலைக்கு எதிரான போராட்டக் காரர்களில் ஒருவரான பாஸ்கர், கன்னியாகுமரி மாவட்டத் தேர்தல் களத்தின் வெற்றி தோல்விகள் மதம் சார்ந்தே வந்துள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமாக மீனவர் வாக்கு இருக்கிறது. இவர்கள் அணு உலை எதிர்ப்பு போராளியான உதயகுமாருக்கு ஆதரவாகத்தான் நிற்பார்கள்.
கூடங்குளம் விவகாரத்தில் பல தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை முடக்கியது உள்ளிட்ட காரணங்களால் கிறிஸ்தவர்களும் உதயகுமாரை ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள். அவரது நாடார் இனத்து மக்களும் கை கொடுப்பார்கள் என்பதால் உதயகுமார் ஒரு பலம்பொருந்திய வேட்பாளராக தெரிகிறார்’’ என்று சொன்னார்.
உதயகுமாரை தேர்தல் களத்துக்கு உந்திக் கொண்டிருப்பவர்களில் ஒரு வரான ஃபாதர் ஆண்டனி கிளாரட் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
உதயகுமாருக்கு விளம்பரம் தேவை யில்லை. அவர் ஆம் ஆத்மி வேட்பாளராக நின்றால் வெற்றி இன்னும் சுலபமாகிவிடும். ஆம் ஆத்மி கட்சி நேர்மையான அரசியலை முன்னெடுக்கிறது. அதையேதான் உதய குமாரும் விரும்புகிறார்.
கூடங்குளம் விவகாரத்தில் கன்னியா குமரி மாவட்டத்தில் அரசு இயந்திரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். உதய குமாரை முன்னிறுத்துவது தேர்தல் வெற்றிக்காக மட்டுமல்ல.. அணு உலைக்கு எதிரான எண்ணம் உடைய வர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் எத்தனை லட்சம் பேர் இருக்கிறோம் என்பதையும் பதிவு செய்யத்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று தன்னைக் கேட்டுக்கொண்டவர் களிடம், யோசித்து பதில் சொல்வதாகச் சொன்னாராம் உதயகுமார். தற்போது அவர் தனது நண்பர்களிடம் தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருப் பதாகச் சொல்லும் உதயகுமார் ஆதர வாளர்கள், ’’இன்னும் ஓரிரு நாளில் அவர் தனது முடிவை அறிவிப்பார்’’ என்கிறார்கள்.
நன்றி
ஹிந்து நாளிதழ்
No comments:
Post a Comment