Latest News

நடக்கும் அதிசய மீன் !!!


நீரிலும் நிலத்திலும் மிக அதிக வேகத்தில் செல்லும் கப்பலை ஹோவர் கிராப்ட் கப்பல் என்கிறார்கள். இக்கப்பலைப் போலவே கடலில் நீந்தியும் நிலப்பரப்பில் நடந்தும் செல்லும் அரியவகையான ஒரு மீன் இனம்தான் நடக்கும் மீன். இவை சுவாசிப்பதும் நடப்பதும்
வித்தியாசமானவை என்றும் இதன் சிறப்புகள் குறித்தும் ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..

“”சகதி அதிகம் நிறைந்த கடற்கரைகளில் நிலப்பரப்பிலும் கடலிலும் வாழும் இந்த நடக்கும் மீனுக்கு கோபிடே என்பது விலங்கியல் பெயர். சொல்லப் போனால் நீரைவிட நிலத்தில் அதிக சுறுசுறுப்புடன் வாழக்கூடிய ஜீவன். பொதுவாக சாதாரண மீன் வகைகள் தனது துடுப்புகளை நீந்துவதற்கு மட்டும்தான் பயன்படுத்தும். ஆனால் இந்த மீன் இனமோ தனது முன் துடுப்புகளை கால்களாக உருமாற்றி நிலத்தில் நடப்பதற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்வது இதன் சிறப்பு.

சில சமயங்களில் கடலுக்கு அடியில் தண்ணீருக்குள் இருக்கும் போது சந்தோஷம் வந்து விட்டால் சுமார் 2 அடி உயரத்திற்குத் தாவிக் குதிக்கும். கடலுக்கு அடியில் சகதி நிறைந்த இடங்களில் துளைகள் அமைத்து அதை வீடு போலாக்கி அவற்றுக்குள் மறைந்து வாழ்கின்றன. கடல் அலைகள் கூட இவ்வீடுகளைச் சேதப்படுத்த முடியாத வகையிலும் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் கடலில் ஏற்படும் வெப்பத்திலிருந்து தப்பிக்கவும் இவ்வீடுகள்தான் இவற்றிற்குப் பேருதவியாக இருக்கின்றன.

முட்டையிடும் போது இக்குழிகளுக்குள் இட்டு அவை பாதுகாப்பாக இருக்க காற்று நிரப்பிய பை போன்ற ஒன்றையும் உருவாக்கி விடுகின்றன. சுவாசிக்க தேவைப்படும் ஆக்சிஜனின் அளவு குறையும் போது தேவைப்பட்டால் இக்காற்றுப் பைகளில் உள்ள காற்றையும் இவை சுவாசித்துக் கொள்கின்றன.

மியுகஸ் படலம் சூரிய ஒளியால் இதன் தொண்டைப்பகுதி காய்ந்து விடாமல் பாதுகாக்கிறது. இம்மீன்களின் செவுள் மற்ற மீன்களைப் போல இல்லாமல் தடித்தும் பெரியதுமாக காணப்படுகின்றது. அதிலும் காற்றை நிரப்பி வைத்துக் கொண்டு நிலத்தில் நடக்கும் நேரங்களில் அதன் மூலமும் சுவாசித்துக் கொள்வது இம்மீன்களிடம் உள்ள மேலும் ஒரு சிறப்பு.

பெரியோ தாலமஸ் என்ற வகையைச் சேர்ந்த நடக்கும் மீன்களில் மட்டுமே 18 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் சுந்தர வனக்காடுகள், குஜராத்தில் கட்ச் வளைகுடா பகுதிகள் மற்றும் மாங்குரோவ் காடுகளிலும் இவை மிக அதிகமாக காணப்படுகின்றன.

இம்மீன்கள் கடற்கரைகளில் தனக்கென ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு அந்தப் பகுதிகளில் மற்ற மீன்களை நுழையக்கூட விடுவதில்லை. கடற்கரைகளில் வாழும் புழுக்கள், பூச்சிகள், சிறு நண்டுகள் இவற்றைத் தின்று உயிர் வாழும்.

கடலுக்கடியில் சகதிக்குழிக்குள் இருக்கும் போது கண்கள் பாதிக்கப்படாதவாறு தவளையைப் போன்று உடலின் வெளிப்புறத்தில் பெரிய கண்கள் இருக்கின்றன.

மட்ஸ்கிப்பர் என்ற ஆங்கிலப் பெயருடைய இம்மீன்கள் தவளைகளைப் போலவே நீரிலும், நிலத்திலும் வாழ்வதும் தவளைகளைப் போலவே தோலினாலும் சுவாசிக்க கூடிய ஒரு அபூர்வ ஜீவன்” என்றார்.

தகவலுக்கு நன்றி >>>>>
ர.செந்தில்குமார் <<<<<<

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.