“தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றில் எந்தக் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்பதை விரைவில் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
வரும் மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் பிரசார குழுத் தலைவராக ராகுல் காந்தியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெள்ளிக்கிழமை தேர்வு செய்து அறிவித்தது. அதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் கட்சித் தலைமையகத்தில் சனிக்கிழமை ராகுல் ஆலோசனை நடத்தினார்.
தமிழகம், புதுச்சேரி பங்கேற்பு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தலைமையில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட சுமார் 150 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனும் பங்கேற்றார். மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், மத்திய முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. தமிழக காங்கிரஸ் சார்பில் மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மாநில பொதுச் செயலர் செல்வம், வடக்கு காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் பேசினர்.
தலைவர்கள் முறையீடு: “கிராமந்தோறும் காங்கிரஸ்; இல்லம்தோறும் கை சின்னம்’ என்ற முழக்கத்துடன் கூடிய இயக்கத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கினோம். அதன் மூலம் கட்சியின் பிரசாரத்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிர்வாகிகள் நியமன பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், யாருடன் கூட்டணி என்பதை அறியாமல் உள்ளோம். மீனவர் பிரச்னையிலும் மத்திய அரசு தலையிட்டு பல்வேறு ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண எல்லா நடவடிக்கைகளையும் தமிழக அரசு தலையிட்டு எடுத்தது என்பதுபோல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறினர்.
தனித்துப் போட்டியிடலாம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், “தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி வைத்துத்தான் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என ஏன் சிந்திக்க வேண்டும்? நாமும் தனித்தே தேர்தலை எதிர்கொள்ளலாம்’ என்றார். அப்போது குறுக்கிட்ட ராகுல், “உங்கள் கருத்து என்ன?’ என வினவினார். அதற்கு இளங்கோவன் “எனது கருத்து தனித்துப் போட்டியிடலாம் என்பதுதான். ஆனால், கூட்டணி வைப்பதாக இருந்தால் அதை விரைவில் தெளிவுபடுத்துங்கள்’ என்றார்.
மாநிலத் தலைவருக்கு அவமரியாதை: ஞானதேசிகன் பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு வரும் காங்கிரûஸச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் மேலிடத் தலைவர்களும் மரியாதைக்குக் கூட மாநில கமிட்டி தலைவரிடம் தகவல் தெரிவிப்பதில்லை. கூட்டணி தொடர்பாக மேலிடத் தலைவர்கள் தமிழகக் கட்சிகளுடன் பேசுவதற்கு முன்பு, மாநில தலைவரின் கருத்தைக் கேட்டறிய வேண்டும். சென்னை வரும் காங்கிரஸ் தலைவர்கள் கட்டாயம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்யமூர்த்தி பவனுக்கு வர வேண்டும்’ என்றார். அவரது யோசனையை மற்ற தலைவர்களும் ஆமோதித்தனர்.
புதுச்சேரி யோசனை: முன்னதாக, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமையில் 22 பேர் அடங்கிய குழுவினர் ராகுலின் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணா ராவ், கமாலினி ஆகியோர் பேசினர்.
“மத்திய அரசின் “உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம்’ பயனாளிகளை முழுமையாகப் போய்ச் சேருவதில் சில பிரச்னைகள் உள்ளன. அதை சரி செய்ய வேண்டும்’ என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
கந்தசாமி தமிழில் பேச, அதை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவர் பேசுகையில், “தமிழக மீனவர் பிரச்னையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.
மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசுகையில், “ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் கொண்டு வரப்பட்டதுபோல, மேலும் சில முக்கிய சட்ட மசோதாக்கள் விரைவில் நிறைவேற்றப்படும். லோக்பாலை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
ராகுல் வேண்டுகோள்: கூட்டத்தின் முடிவில் பேசிய ராகுல் காந்தி, “கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் இணைந்து தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக பாடுபட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால், தேர்தல் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் தலைவர்கள் விடுத்த கோரிக்கைக்கு கடைசி வரை ராகுல் காந்தி பதில் கூறவில்லை. இதனால், தமிழகம், புதுச்சேரி காங்கிரஸார் குழப்பத்தில் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment