லோக்சபா தேர்தலை ஏப்ரல் மத்தியில் துவங்கி, மே மாத துவக்கம் வரை நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், வாக்காளர் இறுதி பட்டியலை தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில், வரும் 10ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதன் மூலம், வரும் லோக்சபா தேர்தலில் 5.44 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர்.
லோக்சபா தேர்தலுடன் இணைந்து ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களும் நடத்தப்பட உள்ளது. தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதி நாட்களில் அல்லத மார்ச் மாத துவக்கத்தின் 3 நாட்களில் வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன் தற்போதைய லோக்சபாவின் கடைசி கூட்டம் நடைபெறும் எனவும், அந்த கூட்டத்தின் போது 2014-15ம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வருவதற்கு முன் தற்போதைய பார்லி.,யின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு ஊழலுக்கு எதிரான மசோதாக்களை அரசு நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அரசின் ஆட்சி காலம் ஜூன் முதல் தேதியுடன் முடிவடைவதால், மே மாதம் 31ம் தேதிக்குள் புதிய அரசு பொறுப்பேற்கும்.
தேர்தலை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக ஒரு கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம். இந்த தேர்தலில் மொத்தம் 80 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு விட்டதாகவும், அதனுடன் புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டு வருவதாகவும், ஜனவரி மாத இறுதிக்கு முன்னதாக இறுதி வாக்காளர் பட்டியல் தயார் ஆகி விடும் எனவும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கான, இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடுவதாக இருந்தது. இந்நிலையில், வரும் 10ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக். 1ம் தேதிப்படி, இறுதி பட்டியலில் 5.14 கோடி வாக்காளர்கள் இருந்தனர். வெளியிடப்பட உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில், 5.44 கோடி பேர் இருப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment