கடலூர் மாவட்டத்தில் முழுமையாக ஆதார் அட்டை வழங்காததால், மத்திய அரசின் நேரடி மானியம் காஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் உணவுப் பொருட்கள் தயாரிக்க காஸ் பயன்படுத்தப்படுகிறது. 19 கிலோ சிலிண்டர் 1,898 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. வீட்டிற்கு வழங்கப்படும் 1,067 ரூபாய் மதிப்புள்ள 14.2 கிலோ சிலிண்டர், மானியத்தில் 407.50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.இதனைப் பெற விண்ணப்பத்துடன் ரேஷன் கார்டு நகல் இணைப்பது வழக்கம்.
மத்திய அரசின் எல்.பி.ஜி., நிறுவனம் நடைமுறைப்படுத்தி வரும் நேரடி மானியத் திட்டத்தின் கீழ், மானியம் பெற ஆதார் அட்டை கட்டாயப் படுத்தியுள்ளது. இதனால், காஸ் ஏஜன்சிகள் மானியத்தில் சிலிண்டர் வழங்க, வாடிக்கையாளர்களிடம் ஆதார் அட்டையைக் கட்டாயமாக கேட்கிறது.மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், பண்ருட்டி, வடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 23 காஸ் ஏஜன்சிகள் மூலம் 3 லட்சம் காஸ் இணைப்புப் பெற்றுள்ளனர். அதில் ஆதார் அட்டை கிடைக்காத பலர், நேரடி மானியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு துவங்கிய ஆதார் அட்டை வழங்கும் பணிக்காக தற்போது, இரண்டாம் கட்ட புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், அத்தியாவசியத் தேவையான காஸ் இணைப்புக்கு மானியத்திற்கு ஆதார் அட்டைக் கேட்டு கெடுபிடி செய்வதால், பொது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.காஸ் ஏஜன்சி உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “நேரடி மானியத் திட்டத்தின் மூலம் காஸ் இணைப்பு பெற தற்போது, கே.ஒய்.சி., படிவம் கட்டாயம் பூர்த்தி செய்து தர வேண்டும். அத்துடன், ஆதார் அட்டை இணைக்க வேண்டும். வாடிக்கையாளர் விவரங்கள், இன்சாப்ட் என்ற சாப்ட்வேர் நிறுவனம் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இவை அனைத்தும் மும்பையிலுள்ள சர்வரில் பதிவாகும்.இதனால், ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட காஸ் இணைப்பு பெறுவது தடுக்கப்படும். இதன் மூலம் போலியான ஆவணங்கள் கொண்டு பெறப்பட்ட இணைப்புகள் தானாகவே ரத்தாகும்’ என்றார்.மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோடி கூறுகையில், ஆதார் அட்டை இன்னும் முழுமையாக வழங்கவில்லை.
இதனால் சிலிண்டர் இணைப்பு பெற ஆதார் அட்டை கட்டாயப்படுத்தக் கூடாதென, மாவட்டத்திலுள்ள 23 காஸ் ஏஜன்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் வங்கிகள் மூலம் நேரடியாக வழங்கப்படும் மானியம் பெற ஆதார் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அது அரசின் கொள்கை. அதில் நாம் தலையிட முடியாது’ என்றார்
No comments:
Post a Comment