Latest News

நாம் வாழ்க்கையில் கற்று கொள்ளவ்ண்டிய ஓன்று இருக்கிறது !! கூடா நட்பு கூடாது

உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மா’ என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.

நட்பின் பிணைப்பையும், இணக்கத்தையும் சொல்லும் ஓர் அசத்தலான வாசகமாய் இதைக் கொள்ளலாம்.

நட்பு இல்லாத மனிதன் இருக்க முடியாது. எல்லோருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் ஆரம்ப கால அரை டவுசர் வாழ்க்கையோடு விடைபெறுகிறார்கள். சிலர் கல்லூரி கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓடி ஓய்ந்து விடுகிறார்கள்.

வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி நமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டுவிடுகிறது.

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். சரியான பாதையில் கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியைப் போல இருக்க வேண்டும் நல்ல நண்பன். ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என வள்ளுவர் அந்தக் காலத்திலேயே அழுத்தமாய்ச் சொன்னதன் காரணம் அதுதான்.

இன்றைய இளைஞர்கள் பலரும் இந்த ‘நட்புத் தேர்வு’ ஏரியாவில் தவறி விடுகிறார்கள்.

‘வாடா… தண்ணியடிக்கலாம்’ என்று அழைப்பதுதான் உண்மை நட்பின் அடையாளமென நினைத்து விடுகிறார்கள்.

உண்மையான நண்பன் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவான்… உங்களுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவான்… உங்களைத் தீய வழியில் இழுக்க மாட்டான்… என்பதை மனதில் அழுத்தமாய் எழுதுங்கள்.

ஒருவேளை நீங்கள் புகை, மது போன்ற பழக்கங்களில் இருந்தால் உங்களை அதில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான் உண்மையான நண்பனின் பண்பு. அதை உற்சாகப்படுத்துவது அல்ல.

நல்ல நண்பன் உங்கள் தவறுகளைக் கடிந்து கொள்வான். உங்கள் மனம் கோணாமல் எப்போதும் நல்ல விஷயங்களையே சொல்லிக் கொண்டிருப்பவன் ஆத்மார்த்த நண்பன் அல்ல. நல்ல நண்பன் நாளைய வாழ்வில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் எனும் ஆர்வம் கொள்பவன். அப்படிப்பட்டவர்கள் உங்கள் குறைகளை உங்களிடம் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார்கள். அதற்காத நட்பே போனால் கூட கவலைப்பட மாட்டார்கள்.

‘நான் தண்ணியடிக்கிற விஷயத்தை அப்பாகிட்டே சொல்லாதே’ என்பது போன்ற சத்தியங்களை நல்ல நண்பன் கண்டு கொள்வதில்லை. சில நேரங்களில் சத்தியம் கூட மீறப்படலாம் என்பது உண்மைத் தோழனுக்குத் தெரியும்.

உங்களுடைய லட்சியங்களை உங்கள் நண்பன் ஆதரிக்கிறானா? அல்லது அவனுடைய செயல்பாடுகள் உங்களுடைய லட்சியத்துக்குத் தடைக்கல்லாய் இருக்கிறதா? என்பதைப் பாருங்கள். உங்களுடைய லட்சியங்களைக் கிண்டலடிப்பவனோ, அதை நோக்கிய உங்கள் பயணத்தின்போது உங்களுக்கு ஊக்கமளிக்காமல் இருப்பவனோ உங்களுடைய நண்பன் அல்ல.

உண்மையான நண்பன் உங்களுடைய திறமைகளை முழுமையாய்ப் பயன்படுத்த ஊக்குவிப்பான். உதாரணமாக, ஓர் இசைக்கலைஞன் ஆவது உங்கள் லட்சியமெனில், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எனும் விஷயங்களில் உங்களுக்கு உதவி செய்வான். உங்களைப் படிப்படியாய் அந்தப் பாதையில் நடத்துவான். வெறுமனே உங்களுடைய வெற்றிகளில் வந்து கை குலுக்கிவிட்டுப் போகும் மனிதனாக அவன் இருப்பதில்லை.

மற்ற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாக விமர்சிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் உஷாராய் இருங்கள். உங்களைப் பற்றி அவர்கள் வேறு நண்பர்களிடமும் அதே போலப் பேசித் திரியும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எந்த நண்பனுடன் இருக்கும்போது அடுத்தவர்களைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்களை அவிழ்க்கிறீர்கள் என யோசியுங்கள். அந்த நண்பன் நல்ல நண்பன் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உண்மை நண்பர்கள் உங்களுடைய சந்தோஷத்தின்போது காணாமல் போனாலும், உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள். தங்களைப் பற்றிய தம்பட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய உரையாடலைக் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்பது நல்ல நண்பனின் அடையாளம்.

‘மனசுக்கு கஷ்டமாயிருக்கு, பணக் கஷ்டமாயிருக்கு, உதவி தேவையிருக்கு’ என கஷ்டம் என்றால் மட்டுமே உங்களிடம் வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள். நட்பின் முக்கியத் தேவையே உதவுவதில்தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய சூழல்களில் ‘மட்டுமே’ உங்களைத் தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

சில நண்பர்கள் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போலத் தலையாட்டும் நண்பர்களே வேண்டுமென்பார்கள். அவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல. அவர்களுடைய நட்பில் வீசுவதும் சுயநல வாசமே.

‘தப்பான’ ஒரு செயலைச் செய்ய உங்களை ஊக்கப்படுத்துபவன் உங்கள் நண்பனல்ல என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்களை நீங்கள் முளையிலேயே கிள்ளி எறியலாம். போதை, திருட்டு, பாலியல், சமூக விரோதச் செயல் போன்ற பல தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச் செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே சாரும். அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் உங்களை இழுப்பவர்கள் உங்கள் எதிரிகளே, நண்பர்கள் அல்ல.

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். ‘எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்’ என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.

உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா? என்று பாருங்கள். எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.

சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.

உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள். தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகுவதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது.

கடைசியாக ஒன்று. நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள்!

நட்பில் உண்மை நிலவட்டும்
வாழ்வின் கிழக்கு புலரட்டும்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.