இன்றைய தேதிக்கு உண்மையான விஷயம் என்றால் கூட அதை ஏன் உரக்க சொல்ல வேண்டும், பிறகு சிக்கலை சந்திக்கவேண்டும் என்று கிட்டத்தட்ட அனைவருமே பயந்து போய் அடக்கி வாசிக்கும் காலமிது.
ஆனால் ஒரு குரல் கடந்த சில நாட்களாக உரக்க ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அந்தக் குரலுக்கு
சொந்தக்காரர் நந்தினி.
மதுரை சட்டக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவி.
குடியின் கொடிய பிடியில் சிக்கி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ் சமுதாயம் வயது வித்தியாசமின்றி சீரழிந்துவருவது கண்டு கசிந்து கண்ணீர் பெருக்கியவர் ஒரு முடிவு எடுத்தார்.
இது சந்தேகமில்லாமல் போதைப் பொருள்தான், இதை அரசே விற்பது சட்ட விரோதம், இந்த தவறை இனியும் தொடர வேண்டாம் உடனே “டாஸ்மாக்’ கடைகளை மூட நடவடிக்கை எடுங்கள் இது குறித்து மதுவினால் நாசமான நூறு குடும்பத்து மாணவர்களோடு வந்து உங்களை சந்தித்து பேசுகிறேன் என்று முதல்வருக்கு கடிதம் போட்டார்.
பல மாதங்களாக பதில் ஏதுமேயில்லை.
தொடர் உண்ணாவிரதம்:
தனது கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி முன்பாக உண்ணாவிரதம் இருந்தார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக உடல்நிலை மோசமடைந்தது. அதிகாரிகளும், காவல் துறையும் தலையிட்டு உங்களது கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று கூறியதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினார்.
ஆனால் நாட்கள் பலவாகியும் கோரிக்கை பற்றி பதிலேதும் இல்லை, நந்தினிக்கு பாட புத்தகத்தை திறந்தால் ரோட்டில் குடித்துவிட்டு கிடக்கும் குடிமகன்களின் அலங்கோலமும் அவரைச் சுற்றி அழும் குடும்பத்தின் சோகங்களும்தான் ஓடியதே தவிர படிப்பு ஓடவில்லை.
பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது அந்த அளவிற்கு ஆரோக்கியமான சமுதாயத்தின் மீது நீதிமன்றத்திற்கு உள்ள அக்கறை ஏன் இந்த மக்கள் மன்றத்திற்கு இல்லை என்று வருத்தப்பட்டவர் இது தொடர்பாக சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு முன்பாகவே உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவுடன் அப்பா ஆனந்தனை துணைக்கு கூப்பிட்டுக் கொண்டு மோட்டார் சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்டார்.
போலீஸ் வழி மறிப்பு:
இவரை சென்னை குரோம்பேட்டையில் வழிமறித்த போலீசார் முதல்வர் கோடநாட்டில் இருக்கிறார் ஆகவே நீங்கள் சென்னைக்கு நுழைவது கூடாது மதுரை திரும்பி போங்கள் என்று திருப்பிஅனுப்பினர்.
சரி மதுரை போகிறோம் என்று சொல்லி விட்டு கோடநாடு நோக்கி பயணத்தை மேற்கொண்டனர். பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது ஒய்வு எடுத்த போது கையோடு கொண்டு போயிருந்த மதுவுக்கு எதிரான துண்டு பிரச்சாரங்களை மக்களிடம் விநியோகித்ததுடன் மதுவிற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.
தகவல் கேள்விப்பட்டு பறந்துவந்த போலீசார் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக குற்றம் சுமத்தி கைது செய்தனர். ஆனால் நந்தினி மதுரைவிட்டு புறப்படும்போதே உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவிட்டார் போலும் மிகவும் தளர்ந்து போய் மயக்க நிலையில் இருந்ததால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு குளுகோஸ் ஏற்றப்பட்டார்.
குளுகோஸ் ஏறி கொஞ்சம் தெம்பு வந்ததும் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைக்க முடிவு செய்து அதன்படி ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு போய் மதுரை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தனர், அங்கு விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு நந்தினி விடுதலை செய்யப்பட்டார்.
கணக்கிலடங்காத அளவிற்கு போலீசாரின் எச்சரிக்கைகள், மிரட்டல்கள், ஆலோசனைகளை கேட்டால் யாருக்குமே போதும் போராடியது என்ற எண்ணம் வரும். ஆனால் நந்தினிக்கு அப்படி ஒரு எண்ணமே வரவில்லை இன்னும் சொல்லப் போனால் இப்போதுதான் போராட்டத்தை வேகப்படுத்தும் தீரம் கூடுதலாக வந்ததுள்ளது.
அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில்:
மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் அப்பா ஆனந்தன்,தங்கை ரஞ்சனாவுடன் வெட்ட வெளியில் வெயிலில் மீண்டும் மதுவிற்கு எதிரான தனது உண்ணாவிரதத்தை துவக்கினார். வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நந்தினி மீண்டும் உண்ணாவிரத பேராட்டம் மேற்கொண்டதை கேள்விப்பட்ட போலீசார் நந்தினியை கைது செய்தனர், நந்தினி உடல் பலவீனமாக இருக்கவே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
என் படிப்பை விட நான் சார்ந்துள்ள தமிழ் சமுதாயம் முக்கியமானது இந்த இனிய சமுதாயம் குடிக்கு அடிமையாகும் கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. இதற்கு காரணமான டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்த உத்தரவு வரும் வரை எனது போராட்டங்கள் தொடரும் என்ற நிலையை எடுத்துள்ள நந்தினிக்கு கொஞ்சம் சுயநினைவு வந்தால் போதும் யாரும் மது குடிக்கக் கூடாது, கடையை மூடணும் வாங்க போராடலாம் என்று ஈனஸ்வரத்தில் முனங்குகிறார். உடல் நலத்தை விஞ்சி நிற்கிறது இவரது மனபலம்.
இன்று நந்தினியின் கோரிக்கையும்,போராட்டமும் கோமாளித்தனமாக இருக்கலாம் ஆனால் இன்று இல்லாவிட்டால் நாளை நிச்சயம் நந்தினியின் கோரிக்கை நிறைவேறும், மது போதையற்ற சமுதாயம் அமைந்தே தீரும்.
- எல்.முருகராஜ்
No comments:
Post a Comment