தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, டெல்லியில் ஜனவரி 1 முதல் தினமும் வீட்டு உபயோகத்திற்கு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 667 லிட்டர் தண்ணீர் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில், அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து டெல்லி குடிநீர் வாரியத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை நிர்வாக அதிகாரி விஜய் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வீட்டு உபயோகத்திற்காக மீட்டர் இணைப்பு வைத்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ஜனவரி 1 முதல் மாதம்தோறும் 20,000 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும். இந்தத் தண்ணீருக்கு எந்த வகையிலும் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது" என்றார்.
மேலும், வழங்கப்படும் தண்ணீர் அளவைக் கண்காணிக்க குழாய்களில் மீட்டர் பொருத்தப்படும் எனவும், நிர்ணயிக்கப் பட்டதை விட அதிகமாகப் பெறும் தண்ணீருக்கு கட்டணாம் வசூலிக்கப் படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் தற்போதைய முடிவு குறித்து 3 மாதத்துக்குப் பிறகு மறு ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நிதி நெருக்கடி காரணமாக, ஜனவரியில் இருந்து தண்ணீர் கட்டணத்தில் 10 சதவீதத்தை உயர்த்துவது என டெல்லி குடிநீர் வாரியம் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment