பாஜக கை ஓங்கியிருக்கிறது, நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்பதெல்லாம் மாயை. அப்படியெல்லாம் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
மதுரையில் நேற்று நடந்த திமுக பொதுக்குழு தீர்மான விளக்க கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் தயாநிதி மாறன்.
அவரது பேச்சு…
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநிலங்களின் பேரவைத் தேர்தல் முடிவுகளை வைத்து பாஜகவின் கை ஓங்கிவிட்டதாகவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் கைகூடிவிட்டதாகவும் ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தைப் பொருத்தவரை காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வந்தன. மத்தியப் பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ,காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது. சத்தீஸ்கர், நாட்டின் அரசியல் நிலையை நிர்ணயிக்கக் கூடிய மாநிலம் அல்ல.
டெல்லியின் தேர்தல் முடிவு மட்டுமே அனைவராலும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அங்கும் பாஜக, காங்கிரஸ் என இரு பிரதான கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இப்படியிருக்க, பாஜகவின் கை ஓங்கி இருக்கிறது, மோடி அலை வீசுகிறது என்ற ஊடகங்களின் பிரசாரம் வெறும் பிரமை மட்டுமே.+
பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இருக்காது. தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அதிமுக, மக்களுக்காக எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மாறாக, மின் கட்டணம், பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்தியது.
திமுக ஆட்சியின்போது 2 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது. ஆனால், இப்போது மின்சாரம் எப்போது வரும், போகும் என்றே தெரியாத நிலை இருக்கிறது. மக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க வேண்டிய அரசு, அம்மா குடிநீர் என்ற பெயரில் விற்பனை செய்கிறது.
மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவது திமுக மட்டுமே என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களவைத் தேர்தல்களில் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தபோதெல்லாம் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் கிடைத்துள்ளன.
சேது சமுத்திரத் திட்டம், நான்கு வழிச் சாலைகள், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, ஜவுளி பூங்காக்கள், தொலைத் தொடர்பு வசதியில் புரட்சி என ஏராளமான திட்டங்களைச் சொல்ல முடியும்.
அதிமுக அரசின் சாதனை என்று எதையும் கூற முடியாது. ஆகவே, வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கட்சியினர் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார் மாறன்.
No comments:
Post a Comment