அமெரிக்காவில் உள்ள இந்திய துணைத் தூதர் தேவ்யானி கைது செய்யப்பட்டது தொடர்பாக, அமெரிக்க அரசுக்கு எதிராக இந்தியா கடுமையான நிலை எடுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா சற்றே இறங்கி வந்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனுடன் போனில் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார். இதன் மூலம் இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள உரசலைத் தவிர்க்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
தேவ்யானி மீதான நடவடிக்கை, வழக்கமான நடைமுறையே என்று கூறி வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை, 24 மணி நேரத்திற்குள் தன் நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. தேவ்யானியின் வயதி்ல் இரண்டு பெண் குழந்தைகளைக் கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ‘இந்த சம்பவத்தால் இந்தியாவில் எழுந்துள்ள உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது,’ என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில், ‘இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர மேனனுடன் டெலிபோனில் தொடர்பு கொண்ட ஜான் கெர்ரி, இந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இத்தகைய சம்பவங்களால் இந்தியாவுடனான அமெரிக்க உறவு பாதிக்கப்படக்கூடாது என்று ஜான்கெர்ரி கூறி உள்ளார், ‘ என, தெரிவித்துள்ளார்.
தேவ்யானி கைது செய்யப்பட்டதில் தவறேதும் இல்லை என்று மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க நிர்வாகம், தேவ்யானி நடத்தப்பட்ட விதம் குறித்து மட்டுமே வருத்தம் தெரிவித்துள்ளது. அமெரிக்க சட்டங்களை அமல் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், அமெரிக்க அதிகாரிகளைப் போன்றே, இங்குள்ள பிற நாட்டினரும் அமெரிக்க சட்டங்களை மதிக்க வேண்டும்; அதே நேரத்தில், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு எந்த அளவுக்கு மரியாதை தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதே அளவுக்கு அமெரிக்காவில் உள்ள இதர நாட்டு தூதர்களுக்கும் மரியாதை தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேவ்யானி மீதான நடவடிக்கை மூலம், தேவ்யானியின் உதவியாளர் சங்கீதாவும் அவருடைய குடும்பத்தினரும் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேற, அமெரிக்கா சதி செய்வதாக இந்தியா குற்றம் சாட்டியதாலும், தேவ்யானி மீதான அமெரிக்க நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்ததாலும், அமெரிக்கா தற்போது சற்றே இறங்கி வந்துள்ளது.
தேவ்யானி கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாள் முன்னதாகவே சர்ச்சைக்குரிய பெண் உதவியாளர் குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேறியதையும், அவர் காணாமல் போய் விட்டதாக ஜூன் மாதமே புகார் கொடுத்தும் அமெரிக்க உள்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் இந்தியா தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியல் விவகாரத்துறை அதிகாரி வெண்டி ஷெர்மான், டெலிபோன் மூலம் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சஜாதா சிங்கைத் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து, சர்ச்சைக்குரிய பெண் உதவியாளரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது; அவரைக் கைது செய்ய டில்லி ஐகோர்ட் வாரன்ட் பிறப்பித்துள்ளது.
தேவ்யானி கைது செய்யப்பட்ட விதம், தூதர்கள் தொடர்பான வியன்னா மாநாட்டுத் தீர்மானத்திற்கு எதிரானது என்ற இந்திய வாதத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்க நிர்வாகம், போதை மருந்து கடத்தல் மற்றும் வழக்கமான குற்றவாளிகள் மட்டுமே இவ்வாறு நடத்தப்படுவர்; தேவ்யானி விஷயத்தில் இந்த தவறு எப்படி நடந்தது என விசாரிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால் தேவ்யானியைக் கைது செய்த போலீஸ் துறை, தேவ்யானியை நடத்திய முறையில் தவறேதும் இல்லை; தூதரக அதிகாரிக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக, அமெரிக்க வெளியுறவுத் துறையின் தூதரக பாதுகாப்பு பிரிவு கையெழுத்திட்டுள்ளதால், தேவ்யானி வழக்கமான நடைமுறையில் நடத்தப்பட்டார் என விளக்கம் அளித்துள்ளது. மேலும் சாதாரண கைதிகளை சிறையில் அடைக்கும் முன் அவர்களுடைய ஆடைகளைக் களைந்து சோதனை செய்யப்படுவது வழக்கமான ஒன்றே என்றும் கைதிகள் தற்கொலை செய்து கொள்வது போன்றவற்றைத் தவிர்க்கவே இவ்வாறு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சர்ச்சைக்குரிய பெண் உதவியாளருக்கு நிரந்தர அமெரிக்க குடியுரிமை கிடைக்கவும் பெருமளவில் நஷ்ட ஈடு கொடுக்கவும் உதவினால் இந்த பிரச்னை தீர்ந்து விடும் என்று தேவ்யானியிடம் ஒரு வக்கீல் பேரம் பேசிய விஷயமும் அம்பலமாகி உள்ளது. எனவே தேவ்யானி மீதான நடவடிக்கை தறசெயலானதல்ல; இதற்கு பின் ஒரு வரலாறே இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் குற்றம் சாட்டியுள்ளார்.
தேவ்யானி விவகாரம் குறித்து அமெரிக்க பத்திரிகைகள் கொஞ்சம் கூட இரக்கம் காட்டவில்லை; பெரிய பத்திரிகைகள் எதுவும் இதுவரை இந்த சம்பவம் குறித்து தலையங்கம் எழுதவில்லை. மாறாக, இந்த விவகாரம் இன்னும் 6 மாத காலத்திற்கு பரபரப்பாக பேசப்படும் என்றும், இந்தியாவில் உதவியாளர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கப்படுவதும் கூடுதல் நேரம் வேலை வாங்கப்படுவதும் வழக்கமான ஒன்றே என்றும் இந்தியாவில் பெண் ஊழியர்கள் கைது செய்யப்படுவதும் ஆடை களையப்பட்டு விசாரிக்கப்படுவதும் அதிர்ச்சி தருகிறது என்றும் இந்திய விமான நிலையங்களில் உயர் அதிகாரிகள் சோதனை செய்யப்படுவதில்லை; ஆனால் அவர்கள் அமெரிக்கா வரும்போது இங்குள்ள நடைமுறைப்படி சோதனைக்குள்ளாக்கப்பட்டால், அதை பெரிது படுத்துவதும், இந்தியாவுக்கு எதிரான அவமதிப்பாக எழுதுவதும் இந்திய பத்திரிகைகள் வழக்கம் என்றும் சம்பந்தமில்லாமல் எழுதி உள்ளன.
தேவ்யானியை அமெரிக்க போலீசார் நடத்திய விதம் குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment