Latest News

சிறார்கள் தவறான வழிகளில் செல்வதைத் தடுக்க உதவும் கூட்டுக் குடும்பம்!


பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களில் தொடர்புடைய 16-18 வயதுக்கு உள்பட்ட சிறார்களையும் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது. ஆனால், சட்டத்தின் மூலம் மட்டுமே இத்தகைய குற்றங்களில் சிறார்கள் ஈடுபடுவதைத் தடுத்துவிட முடியுமா என்ற கேள்விக்கு நம்மால் உறுதியான பதில் கூற முடியாத நிலையே உள்ளது.

தில்லியில் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் பேருந்தில் துணை மருத்துவப் படிப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் இறந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் விசாரணைக் காலத்திலேயே சிறையில் தற்கொலை செய்து கொண்டார். விசாரணையின் முடிவில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 18 வயதை எட்டாத சிறுவனுக்கு மட்டும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், இத்தகைய கொடூரக் குற்றச் செயலில் ஈடுபட்ட அந்தச் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதாது என்றும், ஏனைய குற்றவாளிகளைப் போல அவருக்கும் கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி உயிரிழக்க நேரிட்ட மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, சிறார் வயது நிர்ணயச் சட்டம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையில், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் 16- 18 வயதுக்கு உள்பட்ட சிறார்களையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை குறித்து மத்திய அமைச்சரவை விரைவில் பரிசீலிக்க இருக்கிறது.

நமது நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சிறார் நீதிச் சட்டத்தின்படி, 18 வயதுக்கு உள்பட்டவர்கள் கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டாலும், அவர்கள் சிறார்களாகக் கருதப்பட்டு, அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரைதான் தண்டனை விதிக்க முடியும். எனவே, சிறார் வயது நிர்ணயத்தை 18-லிருந்து 16-ஆகக் குறைக்க வேண்டும் என்ற வாதத்தை பலரும் முன்வைக்கின்றனர். இந்த விஷயத்தில் மத்திய அரசும் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

சிறார் வயது 16-ஆகக் குறைக்கப்பட்டால், கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் இத்தகைய சிறார்களுக்கும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்க முடியும். ஆனால், தண்டிக்கப்படும் இத்தகைய சிறார்கள் வயதில் மூத்த ஏனைய குற்றவாளிகளுடன் ஒரே சிறையில் அடைக்கப்பட்டால் அவர்கள் பெரும் குற்றவாளியாக மாறக்கூடிய ஆபத்தும் உள்ளது.

மேலும், கடுமையான சட்டத்தின் மூலம் மட்டுமே, சிறார்கள் கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுத்துவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் சிறார்கள் தவறான வழிகளில் திசை மாறிச் செல்வதற்கான சூழல்கள் அதிகரித்துள்ளன என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

நமது வீட்டு வரவேற்பறையை பல காலத்துக்கு முன்பே ஆக்கிரமித்துக் கொண்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் வெள்ளமெனப் பெருக்கெடுத்து வரும் உலகளாவிய தொலைக்காட்சிகளின் அருவருக்கத்தக்க ஆபாசக் காட்சிகள், அலைபேசிகள், இணையதளங்கள் வழியாக காணக் கிடைக்கும் ஆபாசப் படங்கள் போன்றவற்றால் இளைஞர்கள் மட்டுமல்லாது விடலைப் பருவ சிறார்களும் கடுமையான மனச்சஞ்சலங்களுக்கு உள்ளாகின்றனர். தொலைக்காட்சிகளையும், இணையதளங்களையும் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் எதுவும் இல்லை.

மாறி வரும் இத்தகைய சூழல்களால், 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் தவறான பாதைக்கு திசைமாறிச் செல்கின்றனர். வெறும் சட்டங்களால் மட்டும் இத்தகைய சிறார்களை நல்வழிக்குத் திருப்பிவிட முடியாது. நமது அடிப்படைக் கல்வி முறையிலும், நமது கூட்டுக் குடும்ப முறையிலும் முன்னர் இருந்த நல்ல விஷயங்களை மீளாய்வு செய்து, அவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசர அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில் மீண்டும் நீதிபோதனை வகுப்புகள் இடம் பெற வேண்டும். அனைத்து மதங்களின் ஆன்மிக நூல்களில் இடம் பெற்றுள்ள நல்ல கருத்துகள் மாணவர்களின் மனங்களில் ஆழமாகப் பதியும் வகையில் அவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதற்காக, கல்வியில் சிறந்து விளங்கும் நல்லாசிரியர்களையும் தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நமது கூட்டுக் குடும்ப முறை மீண்டும் தழைத்தோங்க நம்மால் இயன்றதைச் செய்ய ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். பெற்றோர் மட்டுமல்லாது தாத்தா, பாட்டி, மற்றும் ஏனைய உறவினர்களின் அரவணைப்பில் வளரும் சிறார்கள் தவறான வழிகளில் செல்வது பெருமளவு தடுக்கப்படும்! கடுமையான சட்டங்களால் அல்ல.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.