Latest News

ஆபாச அலையில் கவிழும் இளமை!

தொழில்நுட்பம் என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி' என்பார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணம், நாம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் செல்போன். தொலைத்தொடர்பு வசதியின் உச்சம் செல்போன். நினைத்த நேரத்தில் நினைத்தவருடன் பேச இந்த குட்டியூண்டு உபகரணம் உதவுகிறது. நினைத்த நேரத்தில் வேறு சில 'விஷ(ம)யங்களையும்' செய்ய முடிவதுதான் வினை.

புரியவில்லையா? கொஞ்சம் பிளாஷ்பேக்குக்குப் போங்கள். ஒரு காலத்தில் 'அந்த' மாதிரி படங்களைப் பார்க்க ஆசைப்படும் இளசுகள், பெரிசுகள், ஊருக்கு வெளியே ஒதுங்கிக் கிடக்கும் ஓய்ந்துபோன திரையரங்குக்கு பயந்து பயந்து பதுங்கிப் பதுங்கி போவார்கள். இன்றோ ஆபாசப் படங்கள் செல்போன் வாயிலாக உள்ளங்கைக்கு வந்துவிட்டன.

சக மாணவன், தெருமுக்குக் கடை, இணையதளம் மூலம் செல்போனில் 'ஆபாசங்களை' அள்ளித் திணித்துக்கொள்ள முடிகிறது. விரும்பிய நேரம் பார்க்க முடிகிறது. இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவர் கையிலும் லேட் டஸ்ட் செல்போன் தவழ்கிறது. யோசித்துப் பாருங்கள்... விபரீதம் புரியும்!

ஆபாசக் காட்சிகளுக்கு டி.வி.யோ, லேப்டாப்போ தேவையில்லை. யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயமில்லை. கிடைத்த 'கேப்'பில் சில நொடிகளில் சாதாரணமாய் செல்போன் நம்பர் தேடுவதைப் போலவே பார்த்துவிடும் வசதி. வாடிக்கையாளர்களின் இந்த ஆவலைப் புரிந்துகொண்டு அனேக 'சப்ளையர்களும்' உருவாகிவிட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேவையறிந்து அவர்கள் 'டேஸ்ட்'டுக்கு ஏற்ப சேவை செய்கிறார்கள்.

ஒரு செல்போன் சர்வீஸ்காரர் சொல்வதைக் கேளுங்கள்... ''இப்போதெல்லாம் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு ஆபாசப் படங்களை விரும்புவதில்லை. அவற்றில் 'எல்லாமே' இயந்திரத்தனமாய், எந்தக் கவர்ச்சியும் இல்லாமல் நடந்து முடிந்துவிடுகின்றன என்கிறார்கள்.

மாறாக, 'மார்பிங்' செய்யப்பட்ட பிரபலங்களின் செக்ஸ் படங்கள், தென்னிந்தியப் படங்கள், சிறுசிறு கிளுகிளு எம்.எம்.எஸ்.கள் ஆகியவற்றைத்தான் விரும்புகிறார்கள்'' என்கிறார். பெங்களூர், மைசூர் பகுதியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று அதிர வைக்கிறது.

செல்போன் வைத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களில் 75 சதவீதம் பேர் தினமும் ஆபாசம் தரிசிக்கிறார்கள். அவர்கள் இதற்காக வேறு எந்த சாதனத்தையும் விட செல்போனை 6 மடங்கு அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஆபாச தாகமுள்ளோர் அதிகரிப்பை அடுத்து, அவர்களுக்கு சேவை செய்வோர் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. படிக்கிற வயதில் மாணவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்து கவனம் சிதைந்து போகிறார்கள் என்றால், அவர்களுக்குக் கிடைக்கும் 'பாக்கெட் மணி'யும் இப்படிக் கரைந்து போகிறது.

இதற்கு அடிமையானவர்கள், அடுத்து வீட்டிலேயே பணத்தை எடுக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட ஆபாச வீடியோ கிளிப் பரபரப்பாக பரப்பப்படுகிறது. சட்டசபையிலேயே செல்போனில் ஆபாசப் படம் பார்த்ததற்காக கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. மந்திரிகள் இருவர் ராஜினாமா செய்தார்களே ஞாபகமிருக்கிறதா? அவர்கள் பார்த்தது, அப்போது 'ஹிட்'டாக இருந்த 'பசிலா' என்ற ஆபாசப் படத்தை.

பொதுவாக, இயல்பாக படமாக்கப்படும் உள்ளூர் சரக்குக்கு அதிக மதிப்பிருக்கிறது. மும்பை போன்ற ஜனசமுத்திரங்களில் மூலைக்கு மூலை ஆபாசப் படம் வழங்கும் 'சேவை' நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நபரான ஜுனைத், 4 ஜி.பி. மெமரி கார்டுக்கு 250 ரூபாய் கேட்கிறார். இது 'வழக்கமான' படம் அல்ல என்று உத்தரவாதமும் அளிக்கிறார்.

16 கே.பி. என்றால் 400 ரூபாய். இவருக்கு சில பெண் வாடிக்கையாளர்களும் உண்டாம். செல்போன் சர்வீஸ் சென்டர்கள், 'டாப் அப்' கடைகள் பலவும் கறுப்பான மறுபக்கத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் யாரும் இந்தக் கடைகளுக்கு நேரே சென்று, கிளுகிளு காட்சிகள் கிடைக்குமா என்று கேட்டுவிட முடியாது.

உடனடியாகப் பின்வாங்கி விடுவார்கள் அல்லது தாங்கள் அப்படிப்பட்ட காட்சிகளை அளிப்பதில்லை என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்துவிடுவார்கள். அடிக்கடி இல்லாவிட்டாலும் எப்போதாவது நடக்கும் போலீஸ் ரெய்டு தான் காரணம். எனவே பழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அல்லது அவர்களுடன் செல்பவர்களுக்குத்தான் சேவை கிடைக்கும்.

கேட்கக் கூச்சப்படும் புதியவர்கள் என்றால், அவர்களின் உடல்மொழியிலேயே விஷயத்தை அறிந்துகொண்டு விசாரிப்பார்கள். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் ஏராளம். ஆக, தயாரிப் புச் செலவு என்பது வெகு குறைவு. எனவே வாடிக்கையாளரின் தோற்றத்தைப் பார்த்து விலையை நிர்ணயிக்கிறார்கள்.

கிடைக்கும் தொகை ஏறக்குறைய முழுக்க முழுக்க லாபம்தான். ஆமதாபாத்தின் ரிலீப் ரோட்டில், இங்கு 'டவுன்லோடு செய்து தரப்படும்' என்ற போர்டுடன் சிறு சிறு கடைகள் நிறைய இருக்கின்றன. இங்கு வசதியான வீட்டுப் பையன்கள் தங்களின் பெரிய திரை கொண்ட 3ஜி செல்போனுடன் படையெடுக்கிறார்கள்.

இவர்களின் நிபந்தனையெல்லாம், படம் தெளிவாக இருக்க வேண்டும், வைரஸ் அபாயம் இருக்கக் கூடாது என்பதுதான். இந்த மாதிரி கடை ஒன்றின் உரிமையாளரான ராக்கி, ''நடுத்தர, உயர் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளவட்டங்கள்தான் எனது வாடிக்கையாளர்கள்'' என்கிறார்.

இவரிடம் 100 ரூபாய்க்கு 'டவுன்லோடு' செய்வதற்காக காத்திருக்கும் கல்லூரி மாணவர் விகாஸ், ''நாங்கள் 6 பேர் ஒரு 'கேங்'. இந்த 'கேங்'கில் பெண்களும் உண்டு. நாங்கள் பெறும் ஆபாசப் படங்களை எங்களுக்கு இடையே பகிர்ந்துகொள்வோம்.

வெறும் 100 ரூபாய்க்கு எனக்கு 20-க்கும் மேற்பட்ட எச்.டி. வீடியோ கிளிப்கள் கிடைக்கும்'' என்கிறார். 'குரூப் ஸ்டடி' போல விகாஸ் நண்பர் குழு (இதில் பெண்களும் உண்டு என்று சொன்னோமே!) வாரம் ஒருமுறை கூடி ஒன்றாக ஆபாசக் காட்சிகளைப் பார்த்து ரசிப்பதும் உண்டாம்.

சில மாணவர்கள், தாங்கள் வாடிக்கையாளர்களாக உள்ள கடைகளுக்கே தங்களுக்குக் கிடைக்கும் புதிய வீடியோ கிளிப்களை அளித்து உதவி செய்வதும் உண்டாம். இதில் இன்னொரு பக்கமும் உண்டு. தற்போது பலரும் தங்கள் செல்போனே தங்களுக்கு வசதி என்று இறங்கிவிட்டதால், ஆபாச சி.டி., டி.வி.டி. விற்பனை செய்வோர் அடிவாங்கிக் கிடக்கிறார்கள்.

அவர்களுக்கு 20 சதவீதம் அளவுக்கு 'பிசினஸ்' பாதித்திருக்கிறதாம். ''சற்று வயதான பெண்கள் சிலர் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கிவிட்டு, கேட்கிற காசை கொடுத்து சி.டி. வாங்குவார்கள். அதன் கவரை அவசரமாகக் கிழித்தெறிந்துவிட்டு தங்கள் ஹாண்ட் பேகுக்குள் திணித்துக் கொண்டு அவசரமாக நகர்வார்கள்.

அதெல்லாம் பழைய காலமாகிவிட்டன'' என்கிறார் ஒரு திருட்டு சி.டி. விற்பனையாளர். இளசுகள் இயல்பாகவே இந்த ஆபாச அலையில் அடித்துச் செல் லப்படுகிறார்கள் என்றால், நடுத்தர வயதினர், பெரியவர்களும் பலரும் ஒரு 'ரிலாக்ஸாக்காக' ஆபாசப் படம் பார்ப்பதாகக் கூறுகிறார்கள்.  அலுவலக வேலை நெருக்கடியில் இருந்து ஆறுதல் அளிப்பது இதுபோன்ற படங்கள்தான் என்கிறார் ஒருவர்.

வெளியே பட்டவர்த்தனமாகத் தெரியாவிட்டாலும் சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் பாய்ந்திருக்கும் ஆபாச அலைக்கு அணை போட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. பெண்கள் மீதான எல்லை மீறல், பாலியல் வல்லுறவு போன்றவற்றுக்கு எல்லாம் இதுபோன்ற காட்சிகளே தூண்டுதல் ஆகின்றன என்பது அவர்களின் கவலை.

அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது!

மக்களிடம் விழிப்புணர்வு அவசியம்!

தகவலுக்கு நன்றி.

மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.