சென்னை: அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கடந்த 19ம் தேதி தொடங்கிய இப்பணி நேற்றோடு முடிவடைந்துள்ள நிலையில், 40 தொகுதிகளுக்கு சுமார் 4,537 பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தங்களுடைய வேட்பு மனுக்களை 19.12.2013 முதல் 27.12.2013 வரை தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி 27.12.13 வரை 4,537வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இதில் பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா, தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து தமிழ்நாட்டில் 1,171 வேட்பு மனுக்களையும், புதுச்சேரியில் 4 வேட்பு மனுக்களையும், ஆக மொத்தம் 1,175 வேட்பு மனுக்களை கழக உடன்பிறப்புகள் வழங்கி உள்ளனர்.
அதேபோல் கழக உடன்பிறப்புகள் தாங்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கோரி தமிழ்நாட்டில் 3,343 வேட்பு மனுக்களையும், புதுச்சேரி மாநிலத்தில் 19 வேட்பு மனுக்களையும் வழங்கி உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளிலும், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி மொத்தம் 4,537 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இதன்மூலம் வேட்பு மனு கட்டணமாக 11 கோடியே 34 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டு உள்ளது என்பதை தெரித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment