டெல்லியின் முதல்வராக நேற்று பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜனவரி 2ம் தேதி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கு கோர இருக்கிறார்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது.
நேற்று ராம்லீலா மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், டெல்லி மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்ற 7 நாட்களுக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என அவரிடம் கவர்னர் நஜீப் ஜங் ஏற்கனவே கூறி இருந்தார்.
அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால், வருகிற 2-ந்தேதி, சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்து, வாக்கெடுப்பை சந்திக்கிறார். இதற்காக, வரும் 1-ந்தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, வரும் 3ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற இருக்கிறது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில், குறைந்தபட்ச மெஜாரிட்டிக்கு 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆம் ஆத்மிக்கு 28 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்களும் இருப்பதால், அரவிந்த் கெஜ்ரிவால் தனது மெஜாரிட்டியை நிரூபிப்பதில் சிக்கல் எதுவும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment