Latest News

மருத்துவ குணமுள்ள மாதுளை உற்பத்தி


பழவகைகளில் அணைவருக்கும் பிடித்தமான தாகவும், மிகவும் சுவையுள்ள தாகவும் இருக்கும் மாதுளை. அறுசுவைகளில் அரிதான துவர்ப்புச் சுவையும், இனிப்புச் சுவையும் கலந்து உடல் நலனுக்கு உறுதுணையாக இருக்கின்றது. புனிகா கிரேனேடம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மாதுளை மருத்துவப்பயன்களைக் கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆண்டி ஆக்சிடென்ட்களை அதிகளவில் கொண்டுள்ளது. புனிகலாஜின்ஸ் என்ற மாதுளையில் மட்டுமே காணப்படும் கூட்டுப் பொருள் இதயத்திற்கும், ரத்த நாளங்களுக்கும் இதமளிப்பதாக உள்ளது. கொழுப்பு, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

ரத்தக்குழாய் அடைப்பின் அளவைக் குறைக்கிறது. புற்று நோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள பைட்டோகெமிக்கல் கூட்டுப்பொருள் செரோட்டினின், ஈஸ்ட்ரோஜென் ஆகியன ஹார்மோன் சுரப்புகளை தூண்டுவதால் மன அமைதிக்கும், எலும்பு பலத்துக்கும் உகந்தது.

அதிகளவில் வைட்டமின் – சி மற்றும், ஓரளவு வைட்டமின் -பி 5, ஏ, ஈ ஆகிய இதர வைட்டமின்களையும் கொண்டுள்ளது. கால்சியம், பொட்டாசியம், இரும்பு ஆகிய தாதுக்களை குறிப்பிடத்தக்க அளவில் கொண்டுள்ளது. வயிற்றுக் கடுப்பு, குடல் புண்ணுக்கும் நல்ல மருந்தாகும். மலச்சிக்கலை நீக்கும்.

சாகுபடி குறிப்பு:

கணேஷ், ரூபி, ஜோதி, அர்க்தா, ருத்ரா, மிருதுளா, பக்வா போன்ற ரகங்களை பயிரிடலாம். கார அமிலத் தன்மையும், வறட்சியையும் தாங்கி வளரக் கூடியது மாதுளை. கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரம் வரை வளரும். குளிர்ச்சி மிகுந்த குளிர் காலமும், வறண்ட கோடை காலமும் தரம் மிகுந்த பழங்களை உருவாக்கத் தேவையான பருவமாகும். வேர்ச்செடிகளாகவோ அல்லது பதியன்களாகவும் நடலாம். 2 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழமுள்ள குழிகளில் நடவு செய்ய வேண்டும். ஜூன் முதல் டிசம்பர் வரையான காலம் சாகுபடி பருவமாகும். வரிசைக்கு வரிசை 8 அடி, செடிக்கு செடி 8 அடி என்ற அளவில் ஒரு ஏக்கரும் 640 செடிகள் நடலாம்.

உரப்பாசனத்துடன் கூடிய சொட்டு நீர் பாசன முறையைக் கடைப்பிடிப்பது, நீர் சிக்கனம், நிறைந்த மகசூலுக்கும் ஒரு சேர வழிவகுக்கும். சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை 100 சதவிகிதம் மானியம் அளிக்கிறது.

உரமிடுதல்:

முதலாண்டில் செடிக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 600 கிராம் சூப்பர் பாஸ்பேட், 650 கிராம் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். 2 ம் ஆண்டு முதல் 5 ம் ஆண்டு வரை ஆண்டுக்கு செடிக்கு 20 கிலோ தொழு உரம், 900 கிராம் யூரியா, 1500 கிராம் சூப்பர் பாஸ்பேட், 1300 கிராம் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். 6 வது ஆண்டு முதல் செடிக்கு 30 கிலோ தொழு உரம், 1350 கிராம் யூரியா, 3 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.

இந்த சாகுபடியில் பழந்துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றலாம். அதாவது புல்லிவட்ட இதழ்களை நீக்குவது பழந்துளைப்பான் முட்டை வைப்பதைத் தடுக்கும். பூக்கும் தருணத்தில் 5 செ.மீ. விட்டமுடைய மாதுளம்பிஞ்சுகளைச் சுற்றி வேப்பெண்ணெய் நனைத்த துணிப் பைகளால் மூட வேண்டும்.

மூன்று சதவிகித வேப்பெண்ணெய் அல்லது 5 சதவிகித வேப்பங்கொட்டைச் சாற்றைத் தெளிக்கலாம். பிஞ்சு பிடிக்கும் தருணத்தில் ஏக்கருக்கு ஒரு லட்சம் டிரைகோடெர்மா கலானிஸ் ஒட்டுண்ணியை விடலாம். செதில் பூச்சியைக் கட்டுப்படுத்த குயினோல்பாஸ் 25 ஈசி யை ஒரு லிட்டர் நீரில் இரண்டரை மில்லி கலந்து தெளிக்கலாம்.

முறையான சாகுபடி முறையை மேற் கொண்டால், ஆண்டுக்கு 8 முதல் 10 டன் மகசூல் கிடைக்கும். ஆகவே விவசாயிகள் மாதுளை சாகுபடியில் உயரிய தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து உயர் மகசூல் பெறுவதுடன் உன்னத லாபமும் பெறலாம்.

நன்றி : http://indru.todayindia.info

1 comment:

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.