Latest News

  

தரகுமணி தமிழருவி மணியனின் அபவாதத்தை தகர்க்கும் திரு. சு. வெங்கடேசன் !!

2013

தரகுமணி தமிழருவி மணியனின் அபவாதத்தை தகர்க்கும் திரு. சு. வெங்கடேசன் !!தரகுமணி தமிழருவி மணியனின் அபவாதத்தை தகர்க்கும் திரு. சு. வெங்கடேசன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர் சங்கம் 
உத்தர்கண்ட் பேரழிவில் 15 ஆயிரம் குஜராத்தியர்களை தனிமனிதனாகக் காப்பாற்றிய ரோபோ மோடிக்கு தமிழகத்தில் 15 சதவிகித வாக்குகளா?
15 ஆயிரம் பேரைக் காப்பாற்றினார் என்பது அண்டப்புளுகு, 15 சதவிகித வாக்கு வங்கி என்பது ஆகாசப் புளுகு
அண்ணல் காந்தி கொலை முதல் முசஃப்ஃபர் நகர் படுகொலை வரை சம்பந்தப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். கைக்கூலியே மோடி!!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1991-ம் ஆண்டு முதல், கலை இலக்கிய இரவுகளை தமிழ கத்தில் நடத்தி வருகிறது. அன்று தொட்டு இன்றுவரை பல்லாயிரம் மக்கள் சங்கமிக்கும் மாபெரும் பண்பாட்டு நிகழ்வான கலைஇலக்கிய இரவில் அதிகம் பங்கெடுத்த ஆளுமைகளில் ஒருவர் தமிழருவி மணியன். அதற்குக் கார ணம், அவரது பேச்சின் மையச்சரடாக இருக்கும் மனிதநேயமும், மதவெறி எதிர்ப்பும்தான். ஆனால் இன்று, தமிழருவி மணியன் எடுத் துள்ள அரசியல் நிலைப்பாடு எம்மைப் போன்றவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நரேந்திர மோடியை அவர் அணுகும்விதமும், மோடியின் கடந்த காலம் குறித்து அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடும், மோடியின் மீது அவர் கொள்ளும் நம்பிக்கையும், நம்மைத் திகைப் பில் ஆழ்த்துகிறது.
மோடியை, தமிழருவி மணியன் இரண்டாகப் பிரிக்கிறார். அவர் மட்டுமல்ல, மோடியை நம்பிக்கை நட்சத்திரமாகக் காட்டுபவர்கள் அனைவருமே அவரை இரண்டாகப் பிரித்துதான் பார்க்கின் றனர். நிர்வாகத்திறன் கொண்ட நம்பிக்கை நாயகன் மோடி என்பது ஒரு பக்கம். கோரப்படுகொலையை அரங்கேற்றிய வில்லன் மோடி இன்னொரு பக்கம். இந்த வில்லன் மோடியை நம்பி காங்கிரஸ் இருப்பதாக சொல்லும் தமிழருவி மணியன், நம்பிக்கை நாயகன் மோடியை நம்பி தான் களமிறங்கியுள்ளதைப் பல்வேறு வார்த்தைகளில் சொல்கிறார். இந்தியா, மோடியின் குஜராத் ஆக மாற வேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
குஜராத் மாதிரி என்பது சமூகத்தை இந்துத்துவா பாணியில் பிளவுபடுத்துவதையும், பெருவர்த்தக நிறுவனங்களுக்கு அளவற்ற சலுகைகளை அள்ளி வழங்குவதும்தான். ரிசர்வ் வங்கியின் கவர்னர் தலைமையிலான ஆய்வுக்குழு, இப்போது வெளியிட்டுள்ள அட்டவணையில் குஜராத் 12-வது இடத்தில் இருக்கிறது என்றால் குஜராத்தில் வளர்ச்சி என்று சொல்வது எல்லாம் பம்மாத்துதான் என்பது புரிய வேண்டியவர்களுக்குப் புரியும்.
‘வகுப்புவாதத்தில் ஈடுபடாத நிலையில் மோடி பிரதமராவதை தயக்கமின்றி வரவேற்கலாம்’ என்பது இவர்களது நிலைப்பாடாக இருக்கிறது. இந்த வாக்கியம் எவ்வளவு அபாயகரமானதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். இது, எதிர்காலத்தில் நிகழவிருக்கும் வகுப்புவாதத்தை மட்டுமே மோடியோடு தொடர்பு படுத்துகிறது. குஜராத்தில் நடந்து முடிந்த வகுப்புக்கலவரத்தையும் மோடியையும் நயவஞ்சகத்தோடு பிரிக்கிறது. வகுப்புவாதத்தை திட்டமிட்டு செயல்படுத்திய இடத்திலிருந்து, அவரைக் கீழிறக்கி சாதாரண நிலையில் பத்தோடு பதினொன்றாக ஈடு பட்டதாக அவரைக் காட்டத் துணிகிறது. இந்தத் தப்பித்தல் வாதத்தைத்தான் ராஜ பக்ஷே இலங்கையில் செய்கிறார். ‘வடகிழக்கு மாகாணத்தின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே பேசலாம்’ பழைய கொலைகளைப் பற்றிப் பேசக்கூடாது என்று ராஜபக்ஷே சொல்வதை ஏற்போமானால் மோடி சொல்வதையும் அல்லவா ஏற்றுக் கொள்ள வேண்டும்? எவ்வளவு பெரிய ஆபத்தான அரசியல் நிலைப்பாடு இது!
மோடியை தனிமனிதராக, குஜராத் முதல்வராக மட்டும் தனித்துப் பிரித்து பார்க்க முடியாது. 1925 முதல் தொடங்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொடர்ச்சி. வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் அமைப்பின் நீட்சி அவர். பட்டப்பகலில் பாபர் மசூதியை இடித்து விட்டு, அதைத் தனது கட்சியின் சாதனையாகச் சொன்ன பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளர். இந்த வகுப்புவாத அமைப்புகளின் வலைப்பின்னல்களையும், அரசியல் திட்டங்களையும், அகண்டபாரத நோக்கத்தையும் முழுமையாக மறைத்து மோடியைத் தனித்த மனிதனாக முன்னிறுத்துவதே அபத்தம்.
இன்று நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சிப் போக்குகளில் மோடிக்கும், அவரது கட்சிக்கும் இருக்கும் தொடர்பை அப்பட்டமாக இது மறைக்கப் பார்க்கிறது.உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வேலையை கவனிப்பதற்காக குஜராத்தில் நரேந்திர மோடியின் வலதுகரமாக விளங்கி வரும் அமித் ஷா அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர், இராமர் கோயில் கட்டுவதற்காக தற்காலிகமாக ஒதுக் கப்பட்ட இடத்திலிருந்து தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லத் தொடங்கினார். அடுத்த சில நாட்களில் முசாபர் நகர் பற்றி எரியத் தொடங்கியது. 32 பேர் கொல்லப்பட்டனர். வீடுவாசலை இழந்து எண்ணற்றோர் வெளியேறியுள்ளனர். உ.பி-யில் முசாபர் நகர், பீகாரில் நவாடா மற்றும் பெட்டியா, ஜம்மு காஷ்மீரில் கிஸ்வார் ஆகிய இடங்களில் வகுப்புக்கலவரங்களை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கட்டவிழ்த்து விட்டுள்ளதை ஊடகங்களில் பார்க்கிறோம். பெட்டியா மற்றும் நவாடா மாவட்டங்களில் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் ‘நரேந்திர மோடி வாழ்க’ என்று கோஷமிட்டதாக ஊடகங்கள் தெரிவிக் கின்றன. தேர்தல் நெருங்கநெருங்க உமிழப்படும் வெறுப்பின் அரசியலுக்கு நம் சமூகம் கொடுக் கப்போகும் விலை எவ்வளவோ? அந்தப் பதற் றத்தின் பிரதிநிதியாகத்தான் மோடியைப் பார்க்க வேண்டும்.
1992-ல் பாபர் மசூதி இடிப்பு, 1999-ல் ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிப்பு, 2003-ல் குஜராத் பயங்கரம், 2008-ல் ஒரிஸ்ஸா படுகொலைகள்… இப்போது மீண்டும் உ.பி. பீகார், ஜம்முகாஷ்மீர் என தொடர்கிறது துயரத்தின் பெருங்கதை. இவை எல்லாம் சமூகவிரோதிகள் செய்த கண்மூடித்தனமான அட்டூழியங்கள் அல்ல, ஒரு தத்துவத்தால் வழி நடத்தப்படும் கூட்டத்தினர் செய்துள்ள அழித்தொழிப்பு.
சாதாரண மக்களை ரத்தம் குடிப்பவர்களாக மாற்றும் மதவாத ரசவாதம் இது. சமூக உளவியலில் பாசிசம் உருவாக்கும் பயங்கரத்தன்மையின் விளைவு. ஒன்றின் மீதான வெறுப்பை திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை நம்பவைப்பது. அன்றாட வாழ்வு சார்ந்த பிரச்னையைத் தவிர்த்து, கலாசாரம் சார்ந்த பிரச்னையை தொடர்ந்து பேசுபொருளாக்குவது. மாயைகளின் மீதும், கற்பிதங்களின் மீதுமான உரிமையைக் கோரி குரோதத்தை விஷம்போல் ஏற்றுவது. இதன் விளைவாக இஸ்லாமிய பயங்கரவாதத்தை மேலெழுப்புவது. அது பெரும்பான்மை மத வாதத்துக்கு எண்ணிலடங்கா வாய்ப்புகளை திறந்துவிடுவது. ஒரு ஜனநாயக சமூகத்தின் நிகழ்ச்சிநிரலையே மனிதமாண்புகளுக்கு எதிரான செயல்களமாக மாற்றுவது. இதுதான் இந்துத்துவாவின் செயல்பாடு. இதுதான் மோடியின் செயல்பாடு.
அண்ணல் காந்தியின் படுகொலை தொடங்கி இன்றைய முசாபர் நகர் படுகொலை வரை நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தையும் ஒற்றை வரியில் யாரால் கடந்து போக முடியும்?
உத்ரகாண்ட் பேரழிவைக்கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்த நேரத்தில், திடீரென்று ஒரு செய்தியை ஊடகங்கள் பிளிறித் தள்ளின. மழை வெள்ளத்தில் சிக்கிய 15 ஆயிரம் குஜராத்தியர்களை மோடி மீட்டுவிட்டார் என்று. இது எப்படி நடந்தது? பாதிக்கப்பட்ட பகுதிக்குள் மாநில அரசால் நுழைய முடியவில்லை. மத்திய அரசால் நுழைய முடியவில்லை, ஆனால், குஜராத் அரசு எப்படிப் போனது? மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்களும், ராணுவ விமானமும் தரையிறங்க முடியாத பகுதிக்குள் மோடி அனுப்பி வைத்த ஆட்கள் மட்டும் எப்படி தரையிறங்கினர்? அதிலும் குஜராத்தியர்களை மட்டும் தனியாகக் கண்டறிந்து, 15 ஆயிரம் பேரை எப்படி மீட்டனர்? வெள்ளம், கேதாரிநாத் சிவபெருமானை வாரிச்சுருட்டிக் கொண்டிருந்த போது கூட இவர்கள் மோடி புகழைப் பெருக்கும் குதர்க்க வழிகளைத்தான் யோசித்தனர். அத்தனை ஆயிரம் மக்கள் கதறிவடித்த கண்ணீரைக் கூட, அரசியலுக்கான விற்பனைச் சரக்காகத்தான் பார்த்தனர். இப்போது அடுத்த விற்பனை சரக்குத் தயார். மோடிக்கு ஆதர வாக தமிழகத்தில் 15 சதவிகித வாக்குகள் உருவாகி விட்டன என்பதுதான் அந்தச் சரக்கு.
எங்கிருந்து உருவானது இந்த 15 சதவிகிதம்? எந்தக் கணக்கெடுப்பில் இந்த முடிவு எட்டப்பட்டது? கணக்கெடுப்பை நடத்திய நிறுவனம் எது? என்று கேள்விகள் எழுப்பினால் பூனை தமிழருவியின் பைகளில் இருந்து தவ்விக்குதித்து வெளியே ஓடுகிறது. தமிழருவி அவர்களே, நீங்கள் யார் குரலில், யாருக்காகப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? மக்களின் வாழ்வை செழிப்புற வைத்திருக்கும் உயிர்சக்தி பண்பாட்டு வேற்றுமைகளுக்கு உண்டு. அதை ஒற்றைப் பண்பாடாக மாற்றத்துடிக்கும் இந்துத்துவாவாதிகளுக்காக நீங்களா குரல் கொடுப்பது? இத்தனை ஆண்டுகால பொது வாழ்வின் மூலம், தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைக்கு நீங்கள் முன்வைத்த கருத்துக்களின் மீது, உங்களுக்கு இருக்கும் மரியாதை இவ்வளவுதானா?
”உயர்ந்த லட்சியங்களுக்கு குறுக்கு வழி கிடையாது. குறுக்கு வழியில் செல்லத் தீர்மானித்தவர்களுக்கு கூச்சநாச்சம் கிடையாது’. இது, ஒரு கூட்டத்தில் நீங்கள் பேசி நான் கேட்டதாக ஞாபகம்.
நன்றி :http://indru.todayindia.info 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.