Latest News

  

சிறுநீரக கல்லைக்கரைக்கும் நன்னாரி..! சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு..!

உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை வடிகட்டி, வெளியேற்றும் பணியைச் சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் ...படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. இந்தக் கற்கள்தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன. 

குறைந்த அளவு நீர் அருந்துதல், அதிக அளவு மாமிச உணவு உண்ணுதல், குளிர்பானங்கள் அருந்துதல், வைட்டமின் 'ஏ’ குறைபாடு மற்றும் வெயில் காலத்தில் உடம்பிலுள்ள நீர் அதிகமாக வெளியேறுதல், சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள், சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைத்திருத்தல் போன்ற காரணங்களால் கற்கள் தோன்றலாம்.

அறிகுறிகள்:
இடுப்பில் தொடங்கி அடிவயிறு, தொடை இடுக்கு வரை கடுமையான வலி எடுக்கும். குமட்டல், வாந்தி, காய்ச்சல் இருக்கும். வலியுடன் சிறுநீர் வெளியேறும். எரிச்சல், நீர்க்கடுப்பு மற்றும் அதிகப்படியான வியர்வை, சிறுநீரில் ரத்தம் (அ) சீழ் கலந்து வெளியேறும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
சிறுபீளை இலைச்சாற்றை 30 மி.லி. காலை, மாலை அருந்தலாம்.

கைப்பிடி அளவு நெருஞ்சில் காய், ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை இரண்டையும் இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

அரை ஸ்பூன் சீரகப் பொடியை இளநீரில் கலந்து உண்ணலாம்.

வெள்ளரி விதை, சோம்பு, இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அவற்றை அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.

யானை நெருஞ்சில் இலைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, சர்க்கரை கலந்து உண்ணலாம்.
அரைக் கைப்பிடி அளவு எலுமிச்சை, துளசியை எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

ஒரு பங்கு கொள்ளுடன் 10 பங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி நீரை வடித்துக் குடிக்கலாம்.
ஓமம், மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் சேர்த்துப் பிசைந்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.

மாவிலங்கபட்டைப் பொடி அரை ஸ்பூன் எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

அருகம்புல் கைப்பிடி அளவுடன், 10 மிளகு எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து அருந்தலாம்.
கால் டம்ளர் முள்ளங்கிச் சாறில் அரை ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நீரில் கலந்து பருகலாம்.

ஒரு கிராம் முருங்கை வேர்ப்பட்டைப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.

மாதுளம் விதைப்பொடி அரை ஸ்பூன் எடுத்து, தேனில் கலந்து உண்ணலாம்.

ஒரு ஸ்பூன் துளசி இலைச் சாறில் தேன் கலந்து உண்ணலாம்.

அரைக் கைப்பிடி நன்னாரி வேரில் நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து அதில் கால் ஸ்பூன் கடுக்காய்த் தூள் சேர்த்து உண்ணலாம்.

கால் ஸ்பூன் வெந்தயப் பொடியில் பன்னீர் சேர்த்து அருந்தலாம்.

சுரைக்கொடியை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

ரோஜாப்பூ இதழ், நீர்முள்ளி அரைக்கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

சேர்க்க வேண்டியவை:
தர்ப்பூசணி, நாவல், வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சை, பப்பாளி, கேரட், சுரைக்காய், பீர்க்கு, மஞ்சள்பூசணி, வெண்பூசணி, வெங்காயம், வெள்ளரி, இளநீர்,
நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர்.

தவிர்க்க வேண்டியவை:
ப்ளம்ஸ், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, உருளை, பீன்ஸ், முட்டைக்கோஸ், முந்திரி, பால் பொருட்கள், இறைச்சி, மீன், முட்டை.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.