டெல்லி: அமிலம் இனிமேல் விஷமாக கருதப்பட்டு அந்த பட்டியலில் வகைப்படுத்தப்படும். அமிலம் வாங்குபவர் தனது புகைப்பட அடையாள அட்டையும், முகவரி சான்றும் அளிப்பது கட்டாயமாக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. காரைக்கால் வினோதினி, சென்னை வித்யா என சமீபத்தில் அமிலவீச்சுக்கு ஆளாகி பலியான இளம் பெண்கள். இவர்களைத் தவிர டெல்லி, மும்பை என பல்வேறு நகரங்களில் அமிலவீச்சு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
நாடு முழுவதும் அமில வீச்சு தாக்குதல்கள் அதிகரித்த நிலையில், அமில விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த சமயங்களில் விசாரணைக்கு வந்தபோது, அமில விற்பனையை ஒழுங்குபடுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, மாநில அரசுகளோடு ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அமில விற்பனையை முறைப்படுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமில விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் அறிக்கை தாக்கல் செய்தது அதில் கூறப்பட்டுள்ளதாவது: அமிலம் இனிமேல் விஷமாக கருதப்பட்டு அந்த பட்டியலில் வகைப்படுத்தப்படும் என்றும், அமில விற்பனையாளருக்கு இனிமேல் உரிமம் பெறுவது கட்டாயம் ஆக்கப்படும். அமிலம் வாங்குபவர் தனது புகைப்பட அடையாள அட்டையும், முகவரி சான்றும் அளிப்பது கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு
மேலும் அமில வீச்சு தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு குறித்த வரைவு அறிக்கையையும் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை பார்வையிட்ட நீதிமன்றம், அமில விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பான இறுதி வரைவு அறிக்கையை வருகிற வியாழக்கிழமையன்று தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
No comments:
Post a Comment