நாட்டில் பரவலாக பயன்படுத்தப் பட்டு வரும் செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களும் போட்டி போட்டிக் கொண்டு அதிக அளவில் சிம்கார்டுகளை வழங்கி வருகின்றன. இந்தியாவில் இது போன்று கட்டுப்பாடு இன்றி வழங்கப்படும் சிம் கார்டுகளைப் பெற்று, பயங்கரவாதிகள் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.
அண்மைக்கால மும்பை தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதிகளின் கையில் போலி முகவரி கொடுத்து, போலியான பெயர்களில் சிம்கார்டுகள் பெறுவதைத் தவிர்க்க சில ஆலோசனைகளை அரசு கொண்டுவந்தது. இதன்படி, புதிய விதிமுறைகளை உருவாக்க உள்துறை அமைச்சகம் ஆலோசனை அளித்தது. அதன்படி முகவரி மற்றும் அடையாளச் சான்று இல்லாமல் சிம் கார்டுகள் விற்பனை செய்ய செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் அதன் முகவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனாலும், போலிச் சான்றுகள் மூலம் சிம் கார்டுகள் பெறுவது கட்டுப்பாட்டுகள் வரவில்லை. இதை அடுத்து, புதிய முடிவாக, சிம் கார்டுகள் வாங்கும்போது, சம்பந்தப் பட்ட நபரின் கைரேகைப் பதிவுகளை கட்டாயமாக்கலாம் என முடிவு எடுத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
இதன்படி, இதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்யுமாறு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது உள்துறை அமைச்சகம். அந்தக் கடிதத்தில், சிம்கார்டு பெறும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கைரேகை அல்லது வேறு ஏதேனும் பயோமெட்ரிக் பதிவுகளைப் பெறுவதற்கான வழிவகைகளைக் காணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், செல்போன் சேவை நிறுவனங்களிடம் இது குறித்து கலந்து ஆலோசித்த பின்னரே முடிவு செய்யப்படும் என்றூ தொலைத் தொடர்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment