சென்னை: தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி ராமானுஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பாக அவர் இன்று (26ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வேலூர் மற்றும் சேலத்தில் இந்து முன்னணி மற்றும் பி.ஜே.பி தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இந்து மத அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் அண்மைக் காலமாக தங்களது அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகவும், இந்த விஷயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த கருத்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த விஷயத்தில் கீழ்க்கண்ட விவரங்கள் விளக்கமாக தரப்படுகின்றன. 28.10.2011 அன்று எல்.கே.அத்வானி மதுரை வந்தபோது அவரை குறிவைத்து திருமங்கலத்தில் கல்குகைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்க செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைதாகி காவலில் வைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிறகு கடந்த மாதம் கைது செய்யப்பட்டு இருக்கிறார். குற்றம்சாட்டப்பட்ட எஞ்சிய 3 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நிலத்தகராறில் கொலை:
4.7.2012 அன்று நாகப்பட்டினத்தில் நிலத்தகராறு மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பாஜகவின் பொதுச்செயலாளர் புகழேந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகப்பட்டினத்தை சேர்ந்த சேகர், கார்த்திகேயன் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் சந்திரசேகர், முனீஸ்வரன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சந்திரசேகர் குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். கடந்த கால குற்றச்செயல்களின் அடிப்படிடையில் அவர் ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
பணப் பிரச்சனை காரணமாக கொலை:
23.10.2012 அன்று வேலூரில் பாஜகவின் மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் அரவிந்த ரெட்டி பணப் பிரச்சனை காரணமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வசூர் ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன், எம்.எல்.ஏ ராஜா, பிச்சை பெருமாள் மற்றும் காரணி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
பழிவாங்கும் தாக்குதல்:
6.11.2012 அன்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த தாலுகா செயலாளர் ஆனந்தன் கோயம்புத்தூர் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் தாக்கப்பட்டார். இது பழிவாங்கும் தாக்குதலாக கருதப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சையது அபுதாகிர் கைது செய்யப்பட்டார்.
இன்னொரு நிலத்தகராறு கொலை:
19.3.2013 அன்று பரமக்குடியில் நிலத்தகராறு தொடர்பாக பாஜக நகரச்செயலாளர் தேங்காய்கடை முருகன் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராஜா முகமது, மனோகரன், ரபீக் ராஜா மற்றும் சாகுல் அமீது ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கலாகி உள்ளது.
பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீச்சு-6 பேர் கைது:
13.4.2013 அன்று கோவை நகரில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் வீடு மீது சில விஷமிகள் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை வீசினர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட உமர் பரூக், சதாம் உசேன் மற்றும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 10 பேரில் 6 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மத உணர்வை தூண்டும் வகையில் பேசினார் என்பதற்காக தாக்குதல்:
14.4.2013 அன்று ஊட்டியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மஞ்சுநாத் பொதுக்கூட்டத்தில் மத உணர்வை தூண்டும் வகையில் பேசினார் என்பதற்காக தாக்கப்பட்டார். அவரை தாக்கியதற்காக ரியாஸ் உல் ஹக், பைசல், அப்துல் ரஹீம், பைரோஸ் மற்றும் இம்தியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். மஞ்சுநாத் மீதான புகார் தொடர்பாக அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதானார். இந்த இரு வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மசூதியின் சுற்றுச்சுவர் மீது சுவரொட்டி- தாக்குதல்:
16.4.2013 அன்று குன்னூரில் மசூதியின் சுற்றுச்சுவர் மீது சுவரொட்டி ஒட்டியதற்காக இந்து முன்னணியின் நகரச் செயலாளர் ஹரிஹரன் தாக்கப்பட்டார். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அயூப், சதாம் மற்றும் 10 பேர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜக மாநில நிர்வாகி மீது தாக்குதல்-3 பேர் மீது குண்டாஸ்:
21.4.2013 அன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜகவின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தியை தாக்கியதாக அப்துல் அஜீஸ், அப்துல் ஷமீம், ஷாஜி, முகமது சலின், சையது அலி நிவாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மூவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தனிப்பட்ட விரோதம் காரணமாக தாக்குதல்:
7.7.2013 அன்று தனிப்பட்ட விரோதம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இந்து முன்னணியின் உறுப்பினர் குட்டை நம்பு என்பவரை தாக்கியதாக ராமச்சந்திரன் மற்றும் சண்முகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
சி.பி.சி.ஐ.டி விசாரணை:
1.7.2013 அன்று வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டார். 19.7.2013 அன்று சேலத்தில் பாஜகவின் மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அடையாளம் தெரியாத மூவரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ரூ. 20 லட்சம் பரிசு
தலைமறைவாக உள்ள 4 பேரை கைது செய்வதற்கான பயனுள்ள துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் அறிவிக்கப்பட்டது. இதுதவிர இந்த படுகொலைகளில் ஈடுபட்ட மற்றவர்கள் பற்றிய தகவல்களை தெரிவிப்பவர்களுக்கும் ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட விளக்கங்கள் வாயிலாக இந்து அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். மிரட்டலுக்கு உள்ளானவர்களாக கருதப்படுபவர்களுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கைதானவர்களில் சிலர் குண்டர் சட்டம் அல்லது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உண்மைக்கு புறம்பான தகவல்
மேற்கண்ட சம்பவங்களில் சில தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்தவை ஆகும். சில வழக்குகளில் பாதிக்கப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே ஏராளமானோரை குறிவைத்து தாக்குவதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டப்படுவதும் தவறானது என்பதுடன், உண்மைக்கு புறம்பானதாகும்.
அமைதியை குலைக்க முயன்றால்
எந்த ஒரு தனி நபரையும், எந்த காரணத்திற்காகவும் தாக்குபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை குலைக்க முயல்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று டி.ஜி.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment