Latest News

இஷ்ரத் வழக்கு: குஜராத் போலீஸ்- ஐபி இணைந்து நடத்திய “போலி என்கவுன்ட்டர்”- குற்றப்பத்திரிகையில் சிபிஐ!


அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநில போலீசாரும் ஐபி உளவுப் பிரிவும் இணைந்து நடத்திய "போலி என்கவுன்ட்டர்" நடவடிக்கை என்று சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் புறநகரில் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள் என்று மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான், ப்ரனேஷ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோகர் ஆகிய 4 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த 4 பேரும் அப்பாவிகள் என்றும் குஜராத் போலீசார் நடத்தியது போலி என்கவுன்ட்டர் என்றும் புகார்கள் எழுந்தன.


இதைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சிபிஐ விசாரணையில் ஐ.பி. மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரி ராஜேந்திர குமாருக்கும் இந்த என்கவுன்ட்டரில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் இதை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி மிரட்டப்படுகிறார்.. அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சிபிஐயே கோரியது.

இந்நிலையில் இந்த வழக்கில் அகமதாபாத் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில், அகமதாபாத் புறநகரில் குஜராத் போலீசார் 4 பேரை சுட்டுக் கொன்றது போலி என்கவுன்ட்டர். இந்த போலி என்கவுன்ட்டரை குஜராத் போலீசாரும் மத்திய புலனாய்வு அமைப்பான ஐபியும் இணைந்து மேற்கொண்டன. குஜராத் உயர் போலீஸ் அதிகாரிகளான பாண்டே உள்ளிட்டோர் இந்த போலி என்கவுன்ட்டர் சம்பவத்துக்குக் காரணம். ஐபி அமைப்பின் அதிகாரி ராஜேந்திரகுமாரின் பங்கு குறித்து அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த வழக்கில் போலி எண்கெளன்டரை மூடி மறைக்க குஜராத் போலீசார் முயன்றனர். ஆதாரங்களை அழிக்கவும் முயன்றனர். இந்த விவகாரத்தில் 4 பேரையும் கடத்தி, சட்டவிரோதமாக சிறை வைத்து, மயக்க மருந்து செலுத்தி மயக்கமாக்கி, கொலை செய்துள்ளனர். இஷ்ரத் ஜகான் உள்ளிட்டோர் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட ஏ.கே.-47, 2 பிஸ்டல்கள் குஜராத் ஐபி அலுவலகத்தில் இருந்து போலீசாரால் கொண்டு வரப்பட்டு சம்பவ இடத்தில் போடப்பட்டன.

அதிகாரி வன்சாராவின் உத்தரவுப்படி இதை ஐபிஎஸ் அதிகாரியான ஜி.எல். சிங்கால் (இந்த விவகாரத்தில் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்) தான் ஐ.பி. அலுவலகத்துக்கு ஜூலை 14ம் தேதி சென்று இந்த ஆயுதங்களை வாங்கிக் கொண்டு வந்துள்ளார். பின்னர் அதை போலி எண்கெளன்டர் நடந்த இடத்தில் போட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் எண்கெளன்டருக்கு முன்பாகவே எப்ஐஆரை குஜராத் போலீசார் தயார் செய்துள்ளனர். மேலும் கோதார்பூர் வாட்டர் ஒர்க்ஸ் பகுதியில் வைத்து இந்த போலி எண்கெளன்டர் நடத்தப்பட்டபோது இந்த நான்கு பேரையும் சுட ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும், கமாண்டோவும் மறுத்துள்ளனர். இதனால் கிரைம் பிராஞ்ச் போலீசாரிடையே சண்டை கூட நடந்துள்ளது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கமாண்டோவிடம் இருந்து துப்பாக்கிகளைப் பறித்த மற்ற போலீசார் இஷ்ரத் ஜகான் உள்ளிட்டோரை சுட்டுக் கொன்றனர் என்று சிபிஐயின் குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதே நேரத்தில் இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக புகார் கூறப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் அமித்ஷாவின் பெயர் இந்த முதல் குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை. மேலும் இஷ்ரத் ஜகான் தீவிரவாதியா இல்லையா என்பது குறித்து நாங்கள் விசாரிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த போலி எண்கெளன்டருக்கான காரணம் குறித்து விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்படும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் டிஜி வன்சாரா, பி.பி. பாண்டே (இவர் தலைமறைவாக உள்ளார்), தருன் பரோட், பார்மர், அமின் மற்றும் ஐபி அதிகாரி ராஜேந்திர குமார் உள்பட மொத்தம் 7 பேர் மீது சிபிஐ கொலைக் குற்றம் சாட்டியுள்ளது. போலி எண்கெளன்டர் நடப்பதற்கு முன் சில நாட்கள் இஷ்ரத் ஜகான் உள்ளிட்டோரை கொடியார் பண்ணையில் வைத்து பாண்டே உள்ளிட்ட போலீசார் விசாரித்துள்ளனர். இதன்மூலம் எண்கெளனடரே பொய்யானது என்பதும், இவர்கள் ஏற்கனவே கடத்தி வரப்பட்டு, சிறை வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் உறுதியாகிறது என்று சிபிஐ தனது குற்றப் பத்திரிக்கையில் கூறியுள்ளனர். இவர்களை போலீஸ் அதிகாரிகளான அமின், தருன் பரோட் ஆகியோர் தான் கடத்தி வந்தனர் என்றும் சிபிஐ கூறியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.