சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை உறுதிப்படுத்தியிருக்கும் காங்கிரஸ், தேமுதிகவையும் இதே அணியில் இணைத்துவிட மும்முரம் காட்டுவதாக தெரிகிறது. ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸின் ஆதரவை திமுகவும் தேமுதிகவும் கோரியிருந்தன. ஒருவழியாக காங்கிரஸ் மேலிடம் திமுகவை ஆதரிப்பதாக அறிவித்தது. இதன் மூலம் லோக்சபா தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்து கொண்டிருக்கிறது. இருப்பினும் கைவிட்ட தேமுதிகவை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளையும் காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் உங்களை நம்பித்தானே களத்தில் இறங்கினோம்..காலைவாரிவிட்டீர்களே? என்ற கோபத்தில் இருக்கிறாராம் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதற்கு பதிலாக லோக்சபா தேர்தலில் திமுகவுடன் இணைந்து களம் இறங்குவோம் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறதாம். சென்னைக்கு வருகை தந்திருந்த காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடமும் காங்கிரசார் இதே கருத்தை வலியுறுத்தி இருக்கின்றனர். அப்போது செய்தியாளர்கள் முகுல் வாஸ்னிக்கிடம், விஜயகாந்தை ஏமாற்றிவிட்டீர்களா என்று கேட்டதற்கு, அடிப்படை ஆதாரமற்ற கருத்து என்று கூறியதுடன் நடைமுறையில் அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
இப்படி முகுல் வாஸ்னிக் வெளிப்படையாக தேமுதிகவை விட்டுக்கொடுக்காமல் கருத்து தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டும் அரசியல் பார்வையாளர்கள், லோக்சபா தேர்தலில் தேமுதிகவை இணைத்துக் கொண்டு திமுக அணியில் போட்டியிடுவதை காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது என்பதுதான் இந்த அணுகுமுறை என்கின்றனர். அப்படி திமுக அணியில் தேமுதிக இணையும்போது அக்கட்சி விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் வாங்கித் தருவோம் என்ற உறுதிமொழியையும் காங்கிரஸ் தரலாம் என்றும் கூறப்படுகிறது. என்னவிலை கொடுத்தாவது தமிழகத்தில் வலுவான கூட்டணியோடு லோக்சபா தேர்தலை சந்தித்தாக வேண்டும்..இல்லையெனில் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்பதால் தேமுதிகவை இணைத்துக் கொள்ளவே காங்கிரஸ் கடைசிவரை போராடும் என்றும் காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment