மும்பை: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. சிபிஐ அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்று சிபிஐயே கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு இஷ்ரத் உள்ளிட்டோர் அகமதாபத்துக்கு அருகே போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சமீபத்தில் ஐபி எனப்படும் மத்திய உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குநர் ராஜேந்திர குமார் மீது சிபிஐ பரபரப்பு குற்றம் சாட்டியபோது நாடே திரும்பிப் பார்த்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், பாதுகாப்பு தேவை என்றும் சிபிஐ கோரியுள்ளது.
விசாரணை அதிகாரி சந்தீப் தம்கடேவுக்கு கடந்த சில நாட்களாக மிரட்டல்கள் வருவதாக சிபிஐ கூறுகிறது. இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், விசாரணையை முடக்கும் நோக்கில் கடந்த சில நாட்களாக தம்கடேவுக்கு கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த வழக்கில் ஜூலை 4ம் தேதி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவுள்ளது சிபிஐ என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தம்கடே மீது தாக்குதல் எதுவும்நடைபெறவில்லை. ஆனால் நடைபெறாது என்று சொல்ல முடியாது. அவருக்குப் பாதுகாப்பு தேவை என்று சிபிஐ கூறியுள்ளது. தம்கடே, நாசிக்கைச் சேர்ந்த எஸ்.பி. ஆவார். சிபிஐயின் கோரிக்கை குறித்து மகாராஷ்டிர காவல்துறை பதிலளிக்கையில் தம்கடேவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஷ்ரத் ஜஹான் வழக்கில் சமீபத்தில்தான் சிபிஐக்கும், ஐபிக்கும் இடையே போர் வெடித்தது. ராஜேந்திர குமார் மீது சிபிஐ சரமாரியான குற்றச்சாட்டுக்களை வைத்தது. மேலும் அவரை 2 முறை சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரித்தது. இதை ஐபி ரசிக்கவில்லை. மேலும் ஐபிக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சகமும் குதித்ததால் நிலைமை மோசமானது.
உள்துறை அமைச்சகத்தின் அனுமதியில்லாமல் ராஜேந்திர குமார் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று உள்துறை அமைச்சகம் கண்டிப்புடன் கூறியது. ஆனால் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை என்று சிபிஐ கூறியதால் நிலைமை மேலும் மோசமானது. இந்த நிலையில்தான் விசாரணை அதிகாரிக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக சிபிஐ கூறியுள்ளது.
பிபி பாண்டேவின் கோரிக்கை தள்ளுபடி
இதற்கிடையே இஷ்ரத் ஜஹான் வழக்கில் தன் மீது பதியப்ட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய காவல்துறை அதிகாரி பி.பி. பாண்டேவின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அவரை தலைமறைவுக் குற்றவாளியாகவும் அறிவித்துள்ளது. பாண்டே, 1982ம் ஆண்டு பாட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவரும் ஒரு குற்றவாளியாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இஷ்ரத் ஜஹான் ஒரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்ற தகவலை இவர்தான் உளவுத் தகவல் என்று கூறி போலீஸ் படையினருக்குக் கொடு்தததாக குற்றச்சாட்டு உள்ளது. சம்பவம் நடந்தபோது இவர் அகமதாபாத் நகர இணை ஆணையராக இருந்தார்.
No comments:
Post a Comment