தண்ணீர் பெரிய பிரச்சினை
தண்ணீர் பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது இன்று.
காடுகளை ஈவிரக்கமின்றி அழித்தோம்.
ஐரோப்பியர் வரவுக்கு முன்பு இந்திய நிலப்பரப்பில் 31% காடுகள் இருந்தன.
அவர்கள் நாட்டை விட்டுப் போன போது 21% காடுகள் மிச்சமிருந்தன. 200 ஆண்டுகளில் 10% காணாமற் போயின காடுகள்.
காருண்யம் மிக்க இந்திய தேசத் தலைவர்கள் மக்கட் சேவை ஆற்ற வந்த அறுபத்தைந்தே ஆண்டுகளில் இன்னுமோர் பத்து சதமானம் காடுகள் அழிந்தன
காடுகள் அழிந்தால் மேகம் எங்கே திரளும்?
மழை எங்கே பெய்யும்?
தண்ணீர் சிற்றோடைகளாய், கால்வாய்களாய், ஆறுகளாய், நதிகளாய் ஓடி குளம், குட்டை, தடாகம், பொய்கை, வாவி, குளம், ஏரி, பேரேரி எங்கே நிரம்பும்?
வீட்டுக்குள் குழாயைத் திருப்பினால் தண்ணீர் எங்கிருந்து வந்து கொட்டும்?
மாற்று ஏற்பாடுகளை மட்டுமே யோசிக்கிறார்கள்!
கடல் தண்ணீரைக் குடிநீராக சுழற்சி செய்…
சாக்கடை நீரைச் சுத்தப் படுத்தி மறுபடியும் கழிப்பறைகளுக்குப் பயன் படுத்து…
காட்டை அழிக்காதே என்றால் எவர் செவியிலும் ஏறாது!
ஏனென்றால் காட்டை அழித்தால் சொந்த பணப்பெட்டிகள் நிறையும். பேப்பர் செய்ய மரக்கூழுக்கு, வீட்டின் நிலை – கதவு – சன்னல் – பர்னிச்சர்கள் செய்ய. ஈட்டி, தேக்கு, வேங்கை, சந்தனம் என வெட்டி எடுத்துக் கடைந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய…
பணம் படைத்தவன் வீடுகளின் சுவர்கள், தரை, விதானம் என மரம் இழைத்து அலங்கரிக்க…
மழை பெய்தால் என்ன, சம்பா விளைந்தால் என்ன?
இது ஒரு பக்கம் எனில் வருகின்ற தண்ணீரை எந்த அக்கறையும் அற்று மனம் போலச் செலவு செய்தல்.
ஒரு நகரத்து வீட்டில் நான்கு பேர் வாசம் எனில், ஒருவர் நாளுக்கு எத்தனை முறை வீட்டில் மூத்திரம் போவார்.
போனதும் ஃபிளஷ் டேங்கின் ஹாண்டிலை தாழ்த்தி பத்து லிட்டர் தண்ணீர் கழிப்புத் தொட்டியில் பாய்ச்சுகிறார்.
நாளைக்கு ஒருவர் ஆறு தரம் மூத்திரம் போகிறார் எனக் கொண்டால் கழுவி விட அறுபது லிட்டர் தண்ணீர்.
மலம் கழிக்க, குளிக்க, கை கழுவ, சவரம் செய்ய, கால் கழுவ, முகம் கழுவ… இருப்பவர்கள் இடையூறின்றி தண்ணீரைச் சாக்கடையில் ஊற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
இல்லாதவன், இதே நாட்டில் ஒரு குடம் தண்ணீருக்கு இரண்டு கிலோமீட்டர் நடக்கிறான்.
டீக்கடைகளில், உணவு விடுதிகளில் ஒரு வாய் குடித்து, அரைத்தம்ளர் குடித்து, எச்சிற் படுத்தாமலேயே கொட்டப் படும் தண்ணீர் எத்தனை? வீடுகளுக்கு வரும் விருந்தினர் நாசூக்காக அரை வாய் குடித்து வீணாகும் தண்ணீர் எத்தனை.
கி.ராஜநாராயணன் எனும் தொண்ணூறு வயது கடந்த எழுத்தாளர் பலபக்கங்கள் எழுதி இருக்கிறார், தண்ணீருக்குப் பட்ட பாட்டை.
ஊரில் சில வயோதிகர், காட்டுக்குப் போய் வந்து மேலுக்குத் தண்ணீர் விடும்போது வீட்டு முற்றத்தில் நடந்து கொண்டே குளிப்பார்களாம் . தரை தணுக்கும், முற்றத்துப் புழுதி அடங்கும், குளித்தலும் ஆகும். முன்பு ஊரில் எங்கள் வீட்டுப் புறவாசலில் இரண்டு தென்னை மரங்கள் இருந்தன. எங்க அப்பா, ஒவ்வொரு நாளும் சாப்பிட்டபின் ஒவ்வொரு மரத்து மூட்டில் கை கழுவி, வாய் கொப்பளித்துத் துப்புவார்
தண்ணீரின் அருமை விவசாயிக்குத் தெரியும்.
நகர வாசிக்குத் தெரியாது
காட்டை அழிப்போம், மழையும் பெய்யாது, இருக்கிற தண்ணீரைக் கட்டுப்பாடின்றி வீண் செய்வோம் என்றால் எப்படி?
இதில் வெள்ளைத் துரைகளைப் போல, குளியல் தொட்டிகளில் படுத்து நூறு லிட்டர் தண்ணீரில் குளிப்பவர்களை நாம் கேள்வி கேட்க இயலாது. அவர்கள், கேள்விகள் எட்டும் உயரத்தில் இல்லை.
No comments:
Post a Comment