டெல்லி: மோடியை தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக்கியதை எதிர்த்து பாஜகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்து பரபரப்பு கிளப்பிய எல்கே அத்வானி, இப்போது தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளார்.
இன்று மாலை அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின் வெளியில் வந்த கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் இதனை நிருபர்களிடம் தெரிவித்ததோடு, செய்திக் குறிப்பையும் வெளியிட்டார்.
கடந்த ஞாயிறன்று கோவாவில் நடந்த பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக அறிவித்தார் ராஜ்நாத் சிங்.
இது பெரிய புயலைக் கிளப்பிவிட்டது பாஜகவில். பிரதமர் பதவியை குறிவைத்துக் காத்திருந்த மூத்த தலைவர் எல்கே அத்வானி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததோடு, உடனடியாக கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியை கட்சியின் மூத்த நிர்வாகிகள் மேற்கொண்டனர். ஆனால் எந்த சமரசத்தையும் ஏற்க இன்று காலை வரை மறுத்து வந்தார் அத்வானி.
ஆனால் இன்று கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், அத்வானியின் இல்லத்தில் அவரைச் சந்தித்து சமரசம் பேசினார். அதன் பிறகு வெளியில் வந்து நிருபர்களிடம் ஒரு அறிக்கையை வாசித்தார்.
அதில், "பாஜவின் தேசிய செயற்குழு, பாராளுமன்ற குழு மற்றும் தேர்தல் குழுவிலிருந்து விலகும் அத்வானியின் ராஜினாமாவை ஏற்பதில்லை என்று கட்சியின் பாராளுமன்றக் குழு முடிவு செய்தது. இந்த அமைப்புகளில் அத்வானி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் அவரைக் கேட்டுக் கொண்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்ராவ் பகவத்தும் அத்வானியை ராஜினாமா செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதை ஏற்று ராஜினாமாவை வாபஸ் பெற ஒப்புக் கொண்டார் அத்வானி," என்றார்.
மோடியை தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக நியமித்ததை அத்வானி ஒப்புக் கொண்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அதே நேரம் இந்த பிரஸ் மீட்டில் அத்வானி பங்கேற்கவில்லை.
மோடி வரவேற்பு
அத்வானியின் ராஜினாமா வாபஸ் பெறப்பட்டதாக செய்தி வெளியானதும் மோடி தனது ட்விட்டரில், "கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்களை அத்வானிஜி ஏமாற்ற மாட்டார் என நான் நேற்றே சொன்னேன். இன்று அவரது முடிவை மனமாற வரவேற்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment