உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், மதுரையைச் சேர்ந்த விமானி பிரவீண் (27) உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
மதுரை டி.வி.எஸ். நகர் துரைசாமி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - மஞ்சுளா தம்பதியின் ஓரே மகன் பிரவீண் (27). கடந்த 2007-ல் மதுரையில் பொறியியல் படிப்பில் மெக்கட்ரானிக்ஸ் பிரிவில் பட்டம் பெற்றார். பின்னர், 2008-ல் இந்திய விமானப் படையில் சேருவதற்காக ஹைதராபாதில் விமானி பயிற்சி பெற்றார். பயிற்சியை முடித்து 2009-ல் பெங்களூரில் விமானப் படை விமானியாகச் சேர்ந்தார்.
திருமணமாகாத பிரவீண் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அருகே பரக்பூரில் உள்ள விமானப் படை பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக ஹெலிகாப்டரை இயக்குவதற்கு பிரவீண் அழைக்கப்பட்டார்.
கடந்த வாரம் உத்தரகண்ட் சென்ற அவர், அங்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும்போது கெளசாரில் இருந்து குப்தகாசி செல்லும்போது விபத்து ஏற்பட்டது. இதில் பிரவீண் உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் பிரவீண் உயிரிழந்த சம்பவம் அவரது தாய் மஞ்சுளாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். ஒரே மகனை இழந்து மஞ்சுளா கதறியழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அவரது வீட்டில் உறவினர்களும், பிரவீணின் நண்பர்களும் திரண்டு வந்து அவருக்கு ஆறுதல் கூறினர்.
பிரவீணின் உடல் மீட்கப்பட்டு, மதுரைக்குக் கொண்டு வரப்படுவதாகவும், வியாழக்கிழமை காலையில் அவரது உடல் மதுரைக்கு வந்து சேரும் என்றும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நிராசையான பிரவீணின் ஆசை: இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மீட்புப் பணிகள் முடிந்தவுடன் தாயார் மஞ்சுளாவுடன் தொலைபேசியில் பேசுவதாக பிரவீண் உறுதி கூறியிருந்தார். ஆனால் அவரது ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. இதுவே பிரவீண் பேசிய கடைசி வார்த்தைகளாக அமைந்து விட்டன.
அவரது தாயார் மஞ்சுளா கூறியதாவது: பிரவீண் எனக்கு ஒரே மகன். எப்போதும் உற்சாகமாக காணப்படுவார். செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு என்னுடன் தொலைபேசியில் பேசிய பிரவீண், மீட்புப் பணி முடிந்தவுடன் பேசுவதாக தெரிவித்தார். ஆனால் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இறந்த தகவல் மட்டுமே தொலைபேசியில் கிடைத்தது. அவருக்கு திருமணத்துக்காக பெண் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவரது முடிவு இவ்வாறாகி விட்டது என்றார் மஞ்சுளா.த்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மதுரை விமானி பிரவீண்
No comments:
Post a Comment