சென்னை: தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி கட்சித்தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில், கொறடா உத்தரவை மீறி வாக்களித்தது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க.வில் இருந்த 29 எம்.எல்.ஏ.க்களில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், பேராவூரணி எம்.எல்.ஏ. அருண்பாண்டியன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன், ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கோட்டைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இவர்களைத் தொடர்ந்து சேர்ந்தமங்கலம் தொகுதி பெண் எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம், விருதுநகர் தொகுதியின் தேமுதிக எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் முதல்வரை சந்தித்து மனு கொடுத்தனர்.
தொகுதி வளர்ச்சி தொடர்பாகவே சந்தித்து பேசியதாக அவர்கள் தெரிவித்தனர். அப்போது முதலே இவர்கள் அதிமுகவின் அறிவிக்கப்படாத ஆதரவு எம்.எல்.ஏ.க்களாகவே கருதப்பட்டனர். இருப்பினும் அவர்களை கட்சியை விட்டு நீக்காமலேயே வைத்திருந்தார் விஜயகாந்த். ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதினார்.
அதனை மதிக்காமல் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். இந்நிலையில் தொகுதி திட்டங்களுக்காகத்தான் தாங்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்ததாக கூறியவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பது, ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. இதனையடுத்து கட்சி உத்தரவை மீறிய குற்றத்திற்காக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment