Latest News

மதுவை விட மோசமான கிரிக்கெட்டை தடை விதிக்க வேண்டும் - கி.வீரமணி!


சென்னை : மதுவைவிட அதிகப் போதையூட்டக் கூடியதும், சூதாட்டம். கறுப்புப் பணம் இவற்றின் காரணமாக,
கொலைகள் வரை நடக்கும் கிரிக்கெட்டிற்கு அரசு அனுமதி அளிப்பதை தடை செய்ய வேண்டும் என்று தி.க தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"விளையாட்டு என்பது உடலை நலத்தோடு வைத்துக் கொள்ளவும், உள்ளத்தைப் பக்குவப்படுத்தவும் - வெற்றி, தோல்வி எதுவரினும் சமப் பார்வையுடன் ஏற்கும் மன நிலையைப் பெறவும் பயன்படும் அரிய ஒன்றாகும்.
அது  உடலுக்கும் அதிக வலிமை தராமல், இங்கிலாந்து நாடு என்ற (ஆண்டில் முக்கால் பகுதி) குளிர் பிரதேசத்தில் கால்பகுதி கோடையாக - சூரிய வெளிச்சம் வெப்பம் வரும்போது, அதனைச் சுவைக்க ஏதோ ஒரு விளையாட்டு பொழுதுபோக்காக அமையட்டுமே என்று கண்டுபிடிக்கப்பட்டதே கிரிக்கெட் என்ற விளையாட்டு!
இது கால்பந்து, கைப்பந்து, சடுகுடு என்ற கபடி, சிலம்பம், ஏன் ஆக்கி போன்றவை மூலம் வரும் வலிமை, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி இந்த கிரிக்கெட்டில் கிடையாது. இது ஒரு மேனா மினுக்கி விளையாட்டு. அவ்வளவு தான்!
இன்று அந்தப் பைத்தியம் நமது இளைஞர்கள் - மாணவர்கள் பலருக்கும் பிடித்துள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் எப்படி மது வியாபாரம் நடைபெறுகிறதோ அதுபோல, கிரிக்கெட் என்பது கொள்ளை லாப குபேரர்களின் போட்டிப் பந்தயத் தொழிலாகி விட்டது!

உழைக்கும் மக்கள்கூட, இந்த விளையாட்டை பார்த்து நூற்றுக்கணக்கான ரூபாய் மதிப்பில் டிக்கெட் வாங்கி, கைப் பொருள் இழக்கின்றனர்!

சில நாடுகளின் அணிகளுக்கிடையே நடந்த இந்த கிரிக்கெட் பந்தயம் - இப்போது முற்றிலும் விசித்திரமாக IPL (Indian Premier League) என்ற பெயரால், கிரிக்கெட் ஆட்டக்காரர்களை பல கம்பெனியாளர்கள் முதலீடு செய்து, விலைக்கே வாங்கி ஆட விட்டு, கொள்ளைப் பணம் அடிக்கின்றனர்.
விடிந்தால் போகும் மதுப் போதை, இந்தக் கிரிக்கெட் (டு)ப் போதையோ ஒரு முறை பிடித்தால் எளிதில் போகாது - நீரிழிவு நோய் போல! மனித உரிமைகளுக்கும், சுயமரியாதைக்கும் விரோத மான தத்துவம் மனிதனை கொத்தடிமைகளாக விலைக்கு வாங்குவது என்ற நிலையில், விளையாடுபவர்களை விலை கொடுத்து - ஆடு மாடுகளை வாங்குவதுபோல வாங்கி வைத்துக் கொண்டு, அவர்களை ஆட வைத்து, பணம் கோடிக்கணக்கில் சுரண்டப்படுகிறது!

அதைவிடப் பெரிய அநியாயத்திற்கு அசிங்கப் பூண்போட்டதுபோல், மேல் பந்தயம் சூதாட்டமாக தங்கு தடையின்றி நடைபெறுகிறது. இதனால் கறுப்புப் பணப் பெருக்கமும் மற்றொருபுறம் - என்னே கொடுமை!
இந்த சூதாட்டங்கள்  கொள்ளையில் மட்டுமல்ல கொலையிலும் முடிகிறது என்பது இன்று காலை மும்பை யில் நடைபெற்ற ஒரு 13 வயது சிறுவன் கொலையால் அறிய முடிகிறது. வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதல்லவா?

இதைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி - மாணவரணி - மகளிரணியினர்  இணைந்து மாவட்டத் தலைநகர்களில் வருகின்ற 24.5.2013 வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெறும்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

Thanks: www.inneram.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.