திருச்சி: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு சிறையில் இருந்த தமீம் அன்சாரி நேற்று மதியம் திருச்சி மத்திய சிறையிலிருந்து விடுதலை ஆனார்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தமீம் அன்சாரி. இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி, இந்திய இராணுவ ரகசியங்கள், இராணுவப் பயிற்சி மையம், கடலோரக் காவல்படையின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள், வரைபடங்களை இலங்கைக்கு கடத்த முயன்றதாக திருச்சி கியூ பிரிவு காவல் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
தமீம் அன்சாரி கைதை எதிர்த்து அவரது மனைவி, " தன் கணவர் எவ்வித குற்றத்திலும் ஈடுபடாதவர்.காவல்துறையினர் கட்டாயப்படுத்தி, ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். இவர் மீது பாய்ந்துள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் - என்.எஸ்.ஏ.,வில் கைது செய்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்" என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதற்கான உத்தரவு நேற்று திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து தமீம் அன்சாரி நேற்று மதியம் திருச்சி மத்திய சிறையிலிருந்து விடுதலையானார்.
No comments:
Post a Comment