Latest News

காட்டுப்பள்ளி கந்தூரி விழா கமிட்டியினருக்கு ADT யின் அன்பான வேண்டுகோள் !


அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த 25.4.2013 தேதியிட்டு, காட்டுப்பள்ளி கந்தூரிக் கமிட்டியினருக்கு அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக ஒரு மடல் எழுதி, அதைக் கமிட்டியினர் அனைவரையும் நேரில் சந்தித்துக் கொடுப்பதற்குக், கமிட்டியின் பொருளாளர் (துரியான்) ஷேக் தாவூது அவர்களைத் தொலைத் தொடர்பு கொண்டு நேரம் கேட்டிருந்தோம்.

பல நாட்களில் பல நேரங்கள் தந்தும், தந்த நேரத்தை உறுதி செய்து கொள்வதற்குப் பலமுறை முயன்றபோது அடுத்த நாள்/நேரம் கொடுக்கப்பட்டு, தொலைபேசியில் அழைத்து உறுதி செய்வதாக வாக்களிக்கப்பட்டும் ஒருமுறையேனும் நம்மை அழைக்கவில்லை.

இறுதியாகக் கடந்த 1.5.2013 புதன்கிழமை மாலை கீழத்தெரு சங்கத்தில் கந்தூரிக் கமிட்டிப் பொருளாளரை நேரில் சந்தித்துக் கேட்டபோது 3.5.2013 வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப் பின்னர் நமக்கு நேரம் ஒதுக்கியதாகத் தெரிவித்தார்.

அதுவும் நழுவிப் போனது. தொடர் மறுதலிப்புகள் நம்மைச் சந்திக்க, கந்தூரிக் கமிட்டியினருக்கு விருப்பம் இல்லை என்பதை உணர்த்தியது.

எனவே, அடுத்தநாள் 4.5.2013 அன்று காலை கந்தூரிக் கமிட்டி உறுப்பினர் (மான்) நெய்னா முஹம்மது அவர்களிடம் அதிரை தாருத் தவ்ஹீதின் மடலைக் கொடுத்து, கந்தூரிக் கமிட்டியினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

நாள் : 25.4.2013

அன்புமிக்க காட்டுப்பள்ளி தர்கா (2013) கந்தூரி கமிட்டியின் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

அவ்லியாக்கள் பெயரால் ஆண்டுதோறும் எடுக்கப்படும் கந்தூரிகளுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் கந்தூரிக்கும் கந்தூரி எடுக்கப்படும் அவ்லியாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் தாங்கள் அறிந்திருக்கலாம்.

கந்தூரிகள் எடுக்கப்படுவதால் இஸ்லாத்துக்கோ முஸ்லிம் சமுதாயத்துக்கோ இம்மையிலோ மறுமையிலோ கிடைக்கக்கூடிய நன்மை என்று ஒன்றைக்கூட பட்டியலிட முடியாது.

மாறாக, கந்தூரிகளில் நடைபெறும் இஸ்லாத்துக்குப் புறம்பான அனாச்சாரங்கள், போதைப் பயன்பாடு, பெண்கள் கேலி செய்யப்படுதல், சச்சரவுகள், கலவரங்கள் மட்டுமின்றி பக்தி என்ற பெயரால் பலவிதமான மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் நடத்தப்படும் செயல்பாடுகள் ஆகியவை புனித இஸ்லாத்துக்குப் பெரும் களங்கம் விளைவிக்கக் கூடியவையாகும்.
கடந்த ஆண்டு காட்டுப்பள்ளி தர்காவின் கந்தூரி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கலவரம், நகரக் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

உச்சமாக, கடந்த 23 டிஸம்பர் 2012 அன்று கபுருக்கு சந்தனம் பூசுவதற்காக இருட்டறைக்குள் அனுப்பி அடைக்கப்பட்டு, மூச்சு முட்டி இறந்துபோன அலாவுத்தீனின் மரணம் என்பது 'அவ்லியாவின் பக்தி' எனும் பெயரால் கொடுக்கப்பட்ட நரபலி என்றால் மிகையல்ல. அவ்லியாக்கள் என்று சொல்லப்படுவோரின் கபுருக் கட்டடங்களும் அங்கு ஆண்டு தோறும் நடைபெறும் கந்தூரிக் கொண்டாட்டங்களும் நம் உயிரினும் மேலான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் போதனையின்படி மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை என்பதைக் கடந்த 28.12.2012 அன்று அதிரை தாருத் தவ்ஹீத் வெளிட்ட  "மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்" எனும் பிரசுரத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (இணைப்பு).

சுருங்கச் சொல்வதென்றால், கந்தூரி என்பது பக்தி எனும் பெயரால் சத்திய சன்மார்க்கமான இஸ்லாத்துக்குச் செய்யப்படும் அநீதி. காலங் காலமாக அறியாமையால் தவறுகளில் ஈடுபட்டிருந்தாலும் அல்லாஹ்விடம் தவ்பா செய்தால் அதை ஏற்று, பாவங்களை மன்னிப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான்:

"என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்" (என்று நபியே,) நீர் கூறுவீராக! (அல்குர் ஆன் 39:53).
நாம் மரணித்த பிறகு மறுமை நாள் என்று ஒன்று உண்டு. "அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, ஓர் அணுவளவு நன்மை செய்தவரும் அத(ற்குரிய பல)னை (மறுமையில்) அடைந்து கொள்வார். அன்றியும், ஓர் அனுவளவு தீமை செய்தவரும் அத(ற்குரிய பல)னையும் அடைந்து கொள்வார் " (அல்குர் ஆன் 99:6-8).

மறுமையில் நாம் அடைந்துகொள்ள வேண்டியது நன்மைகளையா? தீமைகளையா? என்பதைத் தேர்ந்துகொள்வது நமது செயல்பாடுகளில்தான் அடங்கியுள்ளது. எனவே, கந்தூரி எனும் வரம்பு மீறிய பாவத்தில் பங்கு கொள்வதிலிருந்து நீங்கள் அனைவரும் முற்றுமாக விலகி, நம் ஊரில் கந்தூரிகள் நிறுத்தப்படுவதற்கு உங்கள் ஜமாஅத்  முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பது நாங்கள் உங்கள் முன் வைக்கும் அன்பான கோரிக்கையாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

"... இன்னும் நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும் வரம்பு மீறுவதிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்" (அல்குர் ஆன் 5:2).

கடந்தகால கந்தூரிக் களியாட்டங்களிலிருந்து விடுபட்டு, அல்லாஹ் நமக்கு விதித்த ஐங்காலத் தொழுகைகளிலும் உபரி வணக்கங்களிலும் ஈடுபட்டு, நமது குற்றங்களையும் பிழைகளையும் மன்னிக்க வேண்டி பிரார்த்தித்து, அவன் அருள்புரிந்த கூட்டத்தாருடன் நம்மைச்  சேர்த்துவைக்க அவன் கருணை காட்டவேண்டும் என்ற துஆவுடன் நிறைவு செய்கிறோம்.

தலைவர் : M.B. அஹ்மது
செயலாளர் : ஜமீல் M. ஸாலிஹ்

அடுத்த கட்ட நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியருக்கு அதே 4.5.2013 நாளிட்டு கந்தூரியை நிறுத்துவதற்கு ஆவன செய்யுமாறு வேண்டுகோள் மடலொன்று அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் எழுதப்பட்டது. அது தனிப்பதிவாக வரும், இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு : இது குறித்து கந்தூரி கமிட்டி நிர்வாகிகளின் கருத்துகளைப் பெற்று தளத்தில் பதிய முயற்சிக்கப்படும்.

நன்றி : அதிரைநியூஸ்

3 comments:

  1. இன்னும் நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும் வரம்பு மீறுவதிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்" (அல்குர் ஆன் 5:2).

    ReplyDelete
  2. இன்னும் நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும் வரம்பு மீறுவதிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்"
    (அல்குர் ஆன் 05:2)

    ReplyDelete
  3. கந்தூரிக்கு வேட்டு....

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.