Latest News

  

உடல் சரீரம் : ஒரு சுகாதாரப் பார்வை...



உடல் சரீரம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த ஒரு பொக்கிஷம், அதை பாதுகாப்பாக வைத்துகொள்வது நம் கடமை. ஆனால் பெரும்பாலான வேளைகளில் நாம் நம் சரீரத்தை கவனிப்பதில் இருந்து தவறி விடுகின்றோம் இல்லை! இல்லவேயில்லை!! அக்கறை காட்டாமல் அலட்ச்சியமாக இருந்து விடுகின்றோம் இதுதான் உண்மை. பிரச்சனை வந்ததுக்கு அப்புறம் ஐயோ அம்மா என்று அடித்துக் கொள்கின்றோம்.

தேவை இல்லாதவைகளுக்கு அக்கறை காட்டும் நாம், தேவை உள்ளவைகளுக்கு அலட்ச்சியமாக இருப்பது என்னவோ தெரியலே!!??

நாம் எந்த ஒரு வேலையையும் செய்வதற்கு முன் அக்கறையோடு கவனிக்க வேண்டும். இங்கு எனக்கு தெரிந்த சிலவற்றை உதாரணங்களாக காட்டி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

நகம் :
இது வளரும் தன்மை கொண்டது, பொதுவாக வாரத்தில் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ வளர்ந்த பகுதிகளை வெட்டுவது வழக்கம், இதுதான் சுகாதாரம். நகத்தை முறையாக வெட்டவில்லை என்றால் விரலுக்கு கேடு வந்து விடும், வெட்டாமல் விட்டுவிட்டால் அதில் அழுக்குகள் தங்கி உணவோடு உடலுக்குள் சென்று கேடு வந்து விடும். நகம் வெட்டுமுன் அதை வெட்டும் கருவி (நகவெட்டி) சுத்தமாகவும் துருப்பிடித்தல் இல்லாமலும் தரமானதாகவும் இருக்க வேண்டும், விரல்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.. 

சோப்பு :
குளியலுக்கு பயன்படுத்தப்படும் வாசனை சோப்பு அனைத்தும் நல்லவைகளா என்று பார்த்தால் அத்தனை வாசனை சோப்புகளும் நல்லவைகள் கிடையாது. குளிக்கும்போது வாசனையாக இருக்குமே தவிர அதனால் ஒரு பயனும் இல்லை. பண்டைய காலங்களில் நம் முன்னோர்கள் மூலிகைகளை பயன்படுத்தி சரீரத்தை சுத்தப்படுத்தி கொண்டார்கள். தோல் மிகவும் முக்கியமானது, தோல் வியாதி வந்தால் அவ்வளவு எளிதாக சுகம் காணமுடியாது, ஆகவே இந்த விஷயத்திலும் மிகவும் கவனம் தேவை.

துணி :
இன்று நாம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி வித விதமான சோப்புக்களை பயன்படுத்தி துணிகளை துவைத்து வருகின்றோம். துணிகளை துவைப்பது நன்று. அதே நேரம் பயன்படுத்தப்படும் சோப்பு கேடு விளைவிக்காதவரை சரீரம் நன்றாக இருக்கும். துணி துவைக்க உதவும் சோப்புக்களை வாங்குமுன் அதன் தரத்தை ஆராய்ந்து வாங்க வேண்டும், எப்போதும் ஒரே நிறுவனத்தின் பொருளையே உபயோகப் படுத்த பழகிக் கொள்ள வேண்டும். துவைத்த துணிகளை நன்றாக நீரில் அலசி விடவேண்டும். துணிகளாலும் உடலுக்கு கேடு வர வாய்ப்பு உண்டு.

தலைமுடி :
தலைமுடி வளரும் தன்மை உடையது, ஆண்கள் வளர விடாமல் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை முடியை குறைத்து விடுவார்கள், பெண்களுக்கு தலைமுடிதான் ஒரு ஒப்பற்ற அழகு, நாற்பது வருடங்களுக்கு முன் உள்ள பெண்களுக்கு தலைமுடி முழங்கால் வரை நீண்டு இருக்கும், இப்ப உள்ள பெண்களுக்கு அவ்வளவு தூரம் நீண்டு இருக்குதா? தலைமுடி அழகாக இருப்பதற்கு சுத்தமான தேங்காய் எண்ணெய்யே போதுமானது, இந்த எண்ணெய் அதீத மருத்துவ குணம் கொண்டது, முடி எப்போதும் கருமையாகவும் பளபளப்புடன் இருக்க உதவுகிறது, நம்மில் பலர் பலப் பல வண்ண நிறங்களையும் வித விதமான வாசனையும் நம்பி கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கி முடிகளையும் அதோடு இணைந்திருக்கும் சரீரத்தையும் கெடுத்து விடுகின்றனர். இப்படி செய்வதால் உடம்பு முழுக்க ஒவ்வாமை ஏற்பட்டு அரிப்பு வர சந்தர்ப்பம் உண்டு.

கை :
கைகளைப் போல ஒரு நண்பன் கிடைப்பானா என்பது போல கை ஒரு உற்ற நண்பன். கைகள் தன்னைச் சுற்றி உள்ளவற்றை கையாள முக்கியமான உறுப்பாகும். கைகளின் தொடு உணர்ச்சி மூலம்தான் பின்னூட்டம் கிடைக்கிறது. உதவிகள் செய்வதற்கும், கைகளைக் காட்டி நல்லா இருகின்றீர்களா என்று விசாரிப்பதற்கும், வெற்றி அடைந்தவனை இரண்டு கைகளையும் தட்டி ஒலிஎழுப்பி சந்தோஷப்படுத்தவும், அன்போடு அணைப்பதற்கும், உணவுகளை அடுத்தவர்களுக்கு ஊட்டுவதற்கும், தான் உண்பதற்கும், எழுதுவதற்கும், இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் கைகளினால் உள்ள நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது நம் கடமை.  

கால் :
கண் போன போக்கிலே கால் போகலாமா? போகக்கூடாது. உடலைத் தாங்குவதற்கும், நடப்பதற்கும், பயன்படும் உடல் உறுப்பாகும். காலின் அடிப்பகுதி பாதம் எனப்படுகிறது. இதன் எழும்பு அமைப்புகள் உடலை தாங்கும் விதத்தில் அமைந்துள்ளது. கால்களின் விரல் இடுக்குகளில் அழுக்குகள் தங்கி விபரீதம் வராமல் பார்த்துகொள்வது நம் கடமை, கால்களினால் உள்ள நன்மைகளை இன்னும் அதிகமாக சொல்லிகொண்டே போனாலும் இப்பகுதி போதாது.

முகம் :
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். புலன்களுக்கு உரிய உறுப்புகள் அனைத்தும் இணைந்த ஒரு பகுதியாகும். மனிதரை அடையாளங்கள் காண முகம்தான் பொதுவாக பயன்படுகின்றது. அடையாள அட்டைகளில் முகத்தின் புகைப்படங்களே உள்ளன. முக பாவம் முக்கியமான உணர்ச்சி வெளிப்பாடு ஆகும். இன்று அனேக அழகு சாதனங்கள் சந்தையில் வந்து விட்டது அழகான முகங்களை கெடுப்பதற்காக. முகத்தை கண்ணாடிபோல் பாதுகாப்பது நம் கடமை.  

பல் :
பல் போனால் சொல் போச்சு. இது நான் சொல்லவில்லை, நம் முன்னோர்கள் சொன்னது. இதை தினமும் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். பல் துலக்கும்முன் பற்பசையோடு சிறிது தூள் உப்பை கலந்து துலக்கி பாருங்கள், பல் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது. பற்களை நான்கு வகைகளாக பிரிக்கலாம். வெட்டும் பற்கள், கோரைப் பற்கள், முன் கடவாய்ப் பற்கள், பின் கடவாய்ப் பற்கள். இரவில் படுக்கைக்கு போகுமுன் உப்புப் கரைத்த நீரில் வாயை நன்றாக கொப்பளித்துவிட்டு படுக்கைக்கு போவது நல்லது. பற்களை பாதுகாப்பது நம் கடமை.

காது :
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் – அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை – குறள். நம் உடலின் குறிப்பிடத்தக்க உறுப்புகளில் காதுகள் மிகவும் முக்கியமானவை. அதனால் தான் கற்றலில் கேட்டாலே நன்று என்று கூறுகிறாகள். காதை சுத்தப்படுத்துவதற்கு தற்போது நவீனமான முறையில் இருபுறமும் பஞ்சிகளை வண்ண வண்ண குச்சிகளில் சுற்றிவைத்து மருந்து கடைகள், சூப்பர் மார்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்கின்றனர், இது மாதிரி சாதனங்களை வைத்து காதை சுத்தம் செய்ய வேண்டாம். இது காதுகளுக்கு நல்லதல்ல, மாறாக சாதாரண துணிகளை வைத்தே சுத்தம் செய்யலாம். கவனத்துடன் செயல்படுவது நல்லது.

கண் :
ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும், நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண்கள், ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் படித்து மனதில் பதிவு செய்து பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது. கண்களின் அனைத்து பாகங்களும் ஒருகிணைந்து ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்கு பார்வை தருகின்றது. தொலைக்காட்சி, கணினி போன்ற மின் சாதன கருவிகளின் மூலம் காட்சிகளை பார்க்கும் நாம் கண்களுக்கு அடிக்கடி ஒய்வு கொடுக்க வேண்டும், அப்படி ஒய்வு கொடுக்கும் பட்சத்தில் நீண்ட நாட்கள் தொலைக்காட்சி சீரியல்களை விடாமல் பார்க்க முடியும்,. தொலைகாட்சியில் காட்சிகளை அதிகம் பார்ப்பது கண்களுக்கு கேடு. கண்களை நான்றாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

உடம்பு, உயிர், உறுப்புகள் எல்லாம் இறைவனால் நமக்கு இலவசமாக கொடுக்கப்பட்ட ஒரு மகத்தான பொக்கிஷமாகும். அதை பக்குமாக பாதுகாத்து பாவிப்பது நம் கடமை. நாம் செய்வதை பார்த்துதான் நம் குழந்தைகளும் செய்து வளரும்.

வாழ்க வளமுடன்
அன்புடன்,

மனித உரிமைக்காவலர்
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.