Latest News

  

சவப்பெட்டிப் பேசுகிறேன் :


ஆவி அடங்கியதும் ஆணிகளே பூட்டாகச்
சாவி தரப்படாமல்  சாத்துவரே கூட்டாக!

பூட்டில்லாப் பெட்டிப் பூவுலகில் வேறுண்டா?
காட்டிவிட்டுக் கதையுங்கள் கல்லாப் பெட்டியே!

நீர்க்குமிழி நேரமுள்ள  .நிலையில்லா உலகம்தான்
ஆர்க்குமிதில் பேதமின்றி அடக்கம்தான் சவப்பெட்டி!

நாவடக்கம் எங்குமில்லை நான்பார்த்தப் பெட்டிகளில்
நானடக்கம் செய்வதனால் நான்மட்டும் கெட்டியாமே!

சென்ற நிமிடம் சிறப்பான கட்டில்
சென்ற உடனே  சவப்பெட்டித் தொட்டில்!

நாற்காலிக் கட்டிலில் நாளை கழிக்கும் நண்பர்காள்
நாலுபேரும் உங்களை நாளை சுமப்பர் என்பெட்டி!

வருபவர்க்கு இடம்வேண்டி வசிப்பவரை இடமாற்றித்
தருவதாற்றான் சவப்பெட்டித் தரைவழியின் புகைவண்டி!

என்னை உணராமல் என்னதான் அடைவீரோ?;
விண்ணை உணரத்தான் வந்துளேன் அறிவீரோ?

மரணமென்னும் கைப்பான மருந்தால் மயக்கத்தின்
தருணமதில் நீள்தூக்கம் தருமிச் சவப்பெட்டி!

கல்லாப் பெட்டிகளே  வாக்குப் பெட்டிகளே
எல்லாப் பெட்டிகளும் எங்கே போவீர்?
மயக்கம் கொட்டிட மாற்றம் செய்தவரே
தயக்கம் விட்டுநீ தங்குவாய் என்னிடமே!

எத்தனையோ வங்கியில் இட்டதெலாம் பங்காகும்
இத்தரையில் தங்கிட இவ்விடமே பங்காகும்!

உங்களின் பெட்டிகள் உங்களோடு வாரா
உங்களின் நண்பனாய் உற்றவனும் நானாம்!

செல்லாக் காசுகளாம் செல்லரிக்கும் உடலுக்குக்
கல்லாப் பெட்டியாகிக் கல்லறையாம் திடலுக்குள்!

என்னைப் பார்த்து அழுதவர்  வாக்குப்பற்றி
எண்ணிப் பார்க்கும் பொழுதில் வாக்குப்பெட்டி!

அஞ்சா நெஞ்சனும் அமைதியாய் எனக்குள்
தஞ்சம்  அடைந்திடும் அஞ்சறைப் பெட்டி!

எல்லாமே எனக்குள் இருப்பதால் தானே
இல்லாத பெருமை உங்களுக்கு வீணே!

கைக்கூலி வேண்டாம் கல்லறைப் பெட்டியில்
மெய்க்கூலி வேண்டும் மேனியின் நற்செயல்!

வாக்கெதுவும் இதுகாறும் வாய்திறந் துதிர்த்ததில்லை;
வாக்குகளை  விலைபேசும் வாக்குகளை உடையவரே!

வாக்குப் பெட்டி வாங்குவது  இலவயம்
கல்லாப் பெட்டிக் காட்டுவது தள்ளுபடி

அஞ்சறைப் பெட்டி அளிப்பது இணைப்பு
நெஞ்சாரச் சொல்லும் நானென்ன கேட்டேன்

சமாதான இடத்தில் சமாதான வழியும்
சமாதான மொழியில் சவப்பெட்டி மொழியும்!

நானா நீயா நாளும் போட்டி
நானோ நியா யத்தின்  பெட்டி

ஓயா துழைத்தவர் ஓய்வினைச் சுவைப்பாரே;
ஓயத் தரப்படும் ஓய்வறைச் சவப்பெட்டி!

அல்லும் பகலும் அயரா உழைப்பால்
அல்லல் படுமே  அனத்துப் பெட்டிகளும்!

நாடி ஒடுங்கும் நாடகம் கட்டுக்குள்
ஆடி அடங்கும்; ஆறடிப் பெட்டிக்குள்!

ஆறடி என்பதே என்றன் சிறப்பு
கூறடி மன்பதைக் காணும் இறப்பு!

அஞ்சறைப் பெட்டிக்கு அளவானச் சிறியனவாய்
அஞ்சறை மட்டுமே அமைந்தாலே பெருமையோ?

கல்லாப் பெட்டிக்குக் குழிகளாய்ச் சிற்றறை
வாக்குப் பெட்டிக்கு வாய்கிழிந்தச் சுற்றறை

நாடாளும் அரசரெலாம் நடந்திட்டார் வம்பாய்;
சாடாமல் அடங்கிடுவர் சவப்பெட்டிப் பாம்பாய்!

கோட்டைக் கட்டியவர் கொடிகட்டிப் பறந்தாலும்
வேட்டைச் சேட்டையர்க்கும் வருமிந்தச் சவப்பெட்டி!

கோடிக் கணக்கினிலே குவலயத்தை வளைத்தாலும்
கோடித் துணியுடுத்திக் குடிபுகுவோம் சவப்பெட்டி(க்குள்)!

ஆசையான நிலவினிலே அமாவாசைச் சவப்பெட்டி;
ஓசையாவும் அடங்குதலே உதட்டுக்குச் சவப்பெட்டி!

அதனாலே,
ஓசையின்றி ஒதுங்கிக் கொள்க
ஓரத்தில் அமர்ந்திடுக எல்லாப் பெட்டிகளும்
நான் மட்டும் நட்ட நடுவில்
நன்றாக அலங்கரிக்கப்பட்டு
உங்கள் உடலோடு ஒட்டியிருப்பேனே !

"கவியன்பன்"
அபுல் கலாம் 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.